width:512px height:256px செய்திகள்

பட்டுக்கூடுகளை பதப்படுத்தி இருப்பு வைக்க விவசாயிகள் முடிவு




திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதியில், மல்பெரி சாகுபடி செய்து, பட்டுக்கூடுகள் உற்பத்தியில், விவசாயிகள், ஈடுபட்டு வருகின்றனர். புழு வளர்ப்பு மனையில், 23 நாட்களை வரை பட்டுப்புழுக்கள் பராமரிக்கப்பட்டு, பட்டுக்கூடுகள் பிரித்தெடுக்கப்படும். பின், அவை அரசு கொள்முதல் மையங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பட்டு வளர்ச்சித்துறையின், கோவை, மைவாடி, சேலம், ஒசூர், தர்மபுரி கொள்முதல் மையங்கள், ஊரடங்கு காரணமாக முடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புழு வளர்ப்பு மனைகளில், குறிப்பிட்ட நேரத்தில், கூடுகளை அறுவடை செய்யாவிட்டால், புழுக்கள் கூட்டை பிரித்து வெளியேறி விடும். இதனால், கூடுகளில் இருந்து நூலை பிரித்தெடுக்க முடியாது. எனவே, பட்டுக்கூடுகளை குறிப்பிட்ட நேரத்தில், அறுவடை செய்வதில், விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பட்டுக்கூடுகளை ஸ்டைபிலிங் எனப்படும் பதப்படுத்துதல் தெரிந்த விவசாயிகள், பிறருக்கு உதவ முன்வந்துள்ளனர். இந்த தொழில்நுட்பத்தில், பட்டுக்கூடுகளை, வெந்நீரில் முக்க வைத்து பதப்படுத்துகின்றனர். இதனால், பட்டுக்கூடுகளை குறிப்பிட்ட நாட்கள் இருப்பு வைத்தும் விற்பனை செய்ய முடியும். எனவே, விவசாயிகள் பட்டுக்கூடுகளை பதப்படுத்தி இருப்பு வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனவே, பட்டு வளர்ச்சித்துறையினர் பட்டுக்கூடுகளை பதப்படுத்துதல் உட்பட தொழில்நுட்பங்கள் குறித்து, வழிகாட்டுதல் வழங்கினால், சிக்கலான நேரத்தில், விவசாயிகள் நஷ்டத்தை தவிர்க்க உதவியாக இருக்கும்.




தற்போதைய செய்திகள்