திருப்பூர் மாவட்டம், உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், 52,000 எக்டர் பரப்பளவில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, தென்னை மரங்களில், பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்பட்டு, மரங்கள் காய்ப்புத்திறன் இழந்து பாதித்துள்ளன. குறிப்பாக, கடந்தாண்டு இப்பகுதியில், துவங்கிய, வெள்ளை ஈ தாக்குதல், தற்போது வரை, கடுமையான பொருளாதார சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. வடகிழக்கு பருவமழை சீசனில், சற்று குறைந்திருந்த வெள்ளை ஈ தாக்குதலின் தாக்கம், கடந்த ஒரு மாதமாக மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த முறையான மருந்துகள் இல்லாத நிலையில், பல வித ரசாயன மருந்துகளை தெளித்தும் பலன் கிடைக்கவில்லை. மழை, பனிப்பொழிவு சீசனுக்கு பிறகு, மீண்டும் தாக்குதல் அதிகரித்துள்ளது. தற்போது, தென்னந்தோப்புகளில், மட்டைகளை குவித்து காலை, மாலை நேரங்களில், தீ வைத்து, புகை ஏற்படுத்தி, ஈக்களை விரட்ட முயற்சித்து வருகிறோம்.
வேளாண்துறை சார்பில், தென்னை ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து, நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகளை பெற்றுத்தர வேண்டும். வட்டாரம் வாரியாக தென்னை சாகுபடி பரப்பை கணக்கிட்டு, அதற்கேற்ப ஒட்டுண்ணி மற்றும் இரை விழுங்கிகளை வழங்க அரசு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால், தேங்காய் மற்றும் கொப்பரை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என தெரிவித்தனர்.
ஒரு சில பகுதிகளில் தென்னை மரங்களில் நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த ரசாயன மருந்து பயன்படுத்துவதை விவசாயிகள் கைவிட்டு வருகின்றனர். மாறாக, வேப்பெண்ணெய், வேப்பங்கொட்டை கரைசலை வடிகட்டி, இளம் வேர்கள் மூலம் தண்ணீர் கலந்து செலுத்துகின்றனர். மேலும், மரத்துக்கு ஐந்து கிலோ வேப்பம்புண்ணாக்கை உரமாக்க வைத்து தண்ணீர் பாய்ச்சுகின்றனர். ரசாயன மருந்துகளை தெளிப்பதால், தோப்புகளில், நன்மை செய்யும் பூச்சிகள், அழிந்து, வெள்ளை ஈ பரவ உதவியாகி விடும் எனவும் விவசாயிகள் எச்சரிக்கின்றனர்.
