தர்மபுரி மாவட்ட பகுதிகளில், வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால், வறட்சி நிலவுகிறது. இதனால், கால்நடைகளுக்கு பசுந்தீவனம் மற்றும் உலர் தீவன தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைக்கோலை கால்நடை வளர்ப்போர் விலைக்கு வாங்கி வந்தனர்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து, கால்நடைகளுக்கு தேவையான வைக்கோலை எடுத்து வர முடியவில்லை என, லாரி மற்றும் மினி சரக்கு வாகனங்களின் ஓட்டுனர்கள் கூறுகின்றனர். மேலும், வைக்கோல் இல்லாமல், கால்நடைகள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து, வைக்கோலை எடுத்து வர வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என, கால்நடை வளர்ப்போர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
