width:750px height:430px செய்திகள்

பூக்களை டிராக்டர் மூலம் அழிக்கும் விவசாயிகள்




ஊரடங்கால் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் டிராக்டர் மூலம் பூக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் செவ்வந்தி, கேந்தி, கோழிக்கொண்டை, மல்லிகை, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் கோடைக் காலங்களில் நடைபெறும் திருவிழாக்கள், திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்வுகளின் போது நல்ல விலை கிடைக்கும் என்பதாலும், நாள்தோறும் வருமானம் கிடைக்கும் என்பதாலும் விவசாயிகள் மலர் சாகுபடியில் அதிகளவு ஆர்வம் காட்டினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் உற்பத்தி செய்த பூக்கள் அனைத்தும் திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்த, சில்லரை வியாபாரிகளுக்கு விவசாயிகள் அனுப்பி வந்தனர்.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வாகனப் போக்குவரத்து முடங்கியது. கோயில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதோடு, பக்தர்கள் தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைக்க வேண்டும் அல்லது குறைந்த எண்ணிக்கையிலான நபர்களைக் கொண்டு நடத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளதால், பூக்களின் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், அறுவடை செய்து நஷ்டம் அடைய விரும்பாத பெரும்பாலான விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சுவதையும் நிறுத்தி விட்டனர். இதனால் சாமந்தி, செவ்வந்தி, மல்லிகை உள்ளிட்ட அனைத்து வகைப் பூக்களும் வயலில் கருகி காய்ந்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு சில விவசாயிகள், காய்கறிகள் பயிரிட்டால் வருமானம் கிடைக்கும் என்ற எண்ணத்தில், சாகுபடி செய்யப்பட்ட மலர்களை டிராக்டர் கொண்டு அழித்து, அந்த இடத்தில் உழவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பூக்கள் சாகுபடிக்கான நாற்றுகளை வெளிமாவட்டங்களில் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கி வந்து நடவு செய்து, தண்ணீா் பாய்ச்சி, உரம், களை என பல்வேறு விதமான செலவுகளை செய்து, தற்போது அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனா் விவசாயிகள்.




தற்போதைய செய்திகள்