திருப்பூர் மாவட்டம், உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், பால் உற்பத்திக்கான கால்நடை வளர்ப்பு முக்கியமானதாக உள்ளது. பால் உற்பத்திக்காக பராமரிக்கப்படும் மாடுகளுக்கு, பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனத்தோடு, இணை உணவுகளும் வழங்குவது அவசியமாகும். அவ்வகையில், புரதச்சத்துக்காக, கால்நடை கலப்பு தீவனம், மக்காச்சோள மாவு மற்றும் புண்ணாக்கு வழங்கப்படுகிறது. இவையனைத்தும், சரிவிகித அளவில் அளித்தால் மட்டுமே பால் உற்பத்தி சீராக இருக்கும். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக, மாட்டுத்தீவனங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அவ்வகையில், 60 கிலோ கொண்ட புண்ணாக்கு மூட்டை விலை, ரூ.2,050 ஆக உயர்ந்துள்ளது. மக்காச்சோளத்தை அரைத்து பெறப்படும், மாவு, 50 கிலோ, ரூ.1,200 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் மூலம், வழங்கப்படும் கலப்பு தீவனம், 50 கிலோ, ரூ.920 ஆக உள்ளது. இதில், மக்காச்சோள மாவு மற்றும் புண்ணாக்கின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மானியம் இல்லாமல், வெளிச்சந்தைகளில் வாங்கப்படும் கலப்பு தீவனத்தின் விலையும் அதிகரித்து வருவதால், கால்நடை வளர்ப்போர் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: கோடை காலத்தில், பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனத்துக்கு தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கமாகும். நடப்பாண்டு, பல்வேறு காரணங்களால், பிற தீவனங்களின் விலையும், உயர்ந்து, தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. ஆனால், பாலின் கொள்முதல் விலையில், மாற்றம் இல்லை. எனவே, தற்போதைய சூழலை கருத்தில் வைத்து, மானிய விலையில், தீவனங்களை வழங்க அரசு உதவ வேண்டும். இல்லாவிட்டால் பால் உற்பத்தி பாதிப்பதுடன், தீவனங்கள் வழங்க முடியாவிட்டால் மாடுகளை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்தனர்.
