தடையால் ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் செடியிலேயே பூத்துக்குலுங்கி கருகும் மலர்களால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மற்றும் மாவட்டத்தின் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆழ்துளைக் கிணற்றுப் பாசனத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகள் மல்லி, முல்லை, சம்பங்கி, கனகாம்பரம், கோழிக்கொண்டை, சாமந்தி உள்ளிட்ட மலர்கள் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர்.
இந்த பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தினந்தோறும் பறிக்கும் பூக்களை வாலாஜா, ஆற்காடு, வேலூர், திருத்தணி, திருப்பதி மற்றும் கோயம்பேடு உள்ளிட்ட நகரங்களின் மொத்த விலை மலர்ச் சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு செல்வர்.
தற்போது மொத்த விலை பூ மார்க்கெட்டு மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள் பூக்களைப் பறித்து விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மலர்த் தோட்டங்களில் பூக்களை பறிக்காமல் விடப்பட்டு உதிர்ந்து கருகி வருகின்றன.
இது குறித்து மலர் சாகுபடி விவசாயிகள் கூறியதாவது: விவசாயிகள் தானியங்கள் பயிரிட்டு அறுவடை செய்தால் விற்பனை செய்ய முடியாத நிலையில் சேமித்து வைத்து விற்பனை செய்யலாம். ஆனால் மல்லி, முல்லை போன்ற நாள்தோறும் அறுவடை செய்யப்படும் மலர்கள் ஒரு நாள் பறிக்காவிட்டால் மறு நாள் உதிர்ந்து எங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்.
இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உரிய கணக்கெடுப்பு நடத்தி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மலர் சாகுபடி விவசாயிகளுக்கு நஷ்டஈடு நிவாரணம் வழங்க வேண்டும்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் மலர்கள் விளைச்சல் இருந்தும், தடை உத்தரவால் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பூக்களை பறித்து விற்பனைக்கு அனுப்ப முடியாமல், செடிகளிலேயே பூத்து கருகி உதிர்ந்து வருகின்றன. இதனால் வருவாய் இன்றி தவித்து வருகிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
