திருவள்ளூர் மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். விவசாயிகள் நெல், வாழை, மா போன்ற பல்வேறு வகையான பயிர்களைப் பயிரிட்டுள்ளனர். தற்போது, பயிர்கள் வளர்ந்து வரும் பருவம் என்பதால் உரம் அவசியம். இல்லையெனில் பயிர் சாகுபடி மகசூல் கிடைக்காத நிலை ஏற்படும். இதனால், அதிகளவில் உரம், பூச்சி மருந்து ஆகியவை தேவைப்படும் நிலையில், அதை வாங்க முடியாத சூழல் விவசாயிகளுக்கு உள்ளது.
இந்நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமாரிடம் விவசாய சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற ஆட்சியர், 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் உரங்கள் விநியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் நடமாடும் வாகனம் மூலம் உரங்கள் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அப்போது, கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளியைப் பின்பற்றி விவசாயிகளுக்கு உரங்களை விநியோகிக்க வலியுறுத்தியுள்ளதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
