தடை உத்தரவால் அறுவடை செய்ய முடியாமல் கொடியிலேயே பழுத்து வெற்றிலை வீணாகிறது. அதனால் விவசாயிகளக்கு ஏற்படும் நட்டத்தை சரி செய்ய, இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
வெற்றிலை மங்களகரமான விசேஷங்களுக்கும், பூஜைகளுக்கும், திருமண நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படும் முக்கிய பயிராகும். வெற்றிலைத் தாம்பூலம் என்பது உடல்நலத்துக்கு முக்கிய மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. சளி பிடித்திருப்பவா்களுக்கு வெற்றிலைக் கஷாயம் மருந்தாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு பயன்படும் வெற்றிலை, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆம்பூரை அடுத்த ரெட்டிமாங்குப்பம், கீழ்முருங்கை, வெங்கிளி, மாதனூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் வெற்றிலைக் கொடி பயிரிடப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெற்றிலை விவசாயம் செய்து வருகின்றனர். கரோனா தடைக் காலத்துக்கு முன் வெற்றிலை பயிரிட்டிருந்த விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் பயிரிட்ட வெற்றிலையை அறுவடை செய்யாமல் விட்டதால் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர்.
ஊரடங்கு காரணமாக கோயில் திருவிழாக்கள் நடைபெறுவதில்லை. திருமணம் உள்ளிட்ட மக்கள் கூடும் சுப நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெற்றிலை வியாபாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
