திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகளவில் புளி சாகுபடியாகிறது. இப்பகுதிகளில் விளையும் புளியை பிரித்தெடுத்து பேக்கிங் செய்யும் உற்பத்திக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. மரங்களில் பறித்தெடுக்கும் புளியம்பழத்தில் ஓடு மற்றும் விதைகளை பிரித்தெடுத்து 5 கிலோ 10 கிலோ பைகளில் பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பும் பணி நடைபெறும். இவை மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது இப்பகுதியில் சீசன் நிலவுவதால் மரங்களில் புளியை உதிர்த்து சேகரிக்கும் பணிகள் கிராம பகுதியில் நடந்து வருகிறது. அதேசமயம் ஊரடங்கு உள்ளதால் புளி உற்பத்திக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் புளி உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் ஈடுபடும் கூலி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கிராமப் பகுதிகளில் தோட்டம் மற்றும் வீடுகளில் சிலர் புளியை பிரித்தெடுக்கும் பணியை செய்து வருகின்றனர். உள்ளூர் அளவில் சில்லரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ சருகு (விதை நீக்கியது) புளி கிலோ ரூ.120 வரை விற்பனையாகிறது. தடை நீங்கியபின் விலை உயர வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
