ஈரோடு மஞ்சள் சந்தையை திறக்க வேண்டும் என கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கச் செயலாளர் செ.நல்லசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது : கரோனா உள்ளிட்ட எந்த நோய்க்கும், வைரஸ்களுக்கும் சிறந்த கிருமி நாசினியான மஞ்சளின் தேவை தற்போது அதிகரித்துள்ளது. ஆனால், தேசிய அளவில் இரண்டாவது மிகப்பெரிய மஞ்சள் சந்தை கரோனாவால் மூடப்பட்டு வியாபாரம் தடைபட்டுள்ளது.
மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதையும், அதன் மூலம் கூட கரோனா பரவல் தடுக்கப்படும் என்ற நோக்கத்தில் ஈரோட்டில் மஞ்சள் சந்தையைத் திறந்து செயல்படுத்த வேண்டும். ஆண்டு பயிரான மஞ்சளை பதப்படுத்திய விவசாயிகள் அவற்றை உரிய நேரத்தில், நல்ல விலையில் விற்க முடியாமல் திணறுகின்றனா். இச்சூழலில் மஞ்சள் சந்தையை உடனடியாகத் திறப்பது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
