width:605px height:339px செய்திகள்

தென்னையில் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மானியம்




கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம் ஆகிய வட்டாரங்களில் சுமார் 1,450 ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை சாகுபடி நடைபெறுகிறது. தற்போது நிலவிவரும் தட்ப வெப்ப சூழல் காரணமாக தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது. இதன் அறிகுறிகளாக, இலைகளின் அடிப் பாகத்தில் சுருள் வடிவத்தில் முட்டைகள் காணப்படும். குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் ஓலைகளின் அடியில் இருந்து சாற்றை உறிஞ்சுகின்றன.

இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவக் கழிவுகள் கீழ்மட்ட அடுக்கிலுள்ள ஓலைகளின் மேற்பரப்பில் பரவுகின்றன. இவற்றின் மேல் கேப்னோடியம் எனும் கரும்பூஞ்சாணம் படா்கிறது. வெள்ளை ஈக்கள் அனைத்து தென்னை ரகங்களிலும் காணப்பட்டாலும் சௌகாட் ஆரஞ்சு குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை, மலேசியன் பச்சைகுட்டை ஆகிய குட்டை ரகங்களிலும், குட்டை மற்றும் நெட்டை வீரிய ஒட்டு ரகங்களிலும் அதிகளவில் தாக்குதல் ஏற்படுத்துகின்றன.

சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த அரசால் மானியமாக ஹெக்டேருக்கு ரூ.2,100 வீதம் வழங்கப்படுகிறது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜி.ஆர்.முருகன் சுருள் வெள்ளை பூச்சிகளை கட்டுப்படுத்தும் மானிய திட்டத்தை தொடக்கி வைத்து விவசாயிகளுக்கு மஞ்சள் ஒட்டுப்பொறி, இரை விழுங்கி அட்டைகளை வழங்கி கூறியதாவது:

அதிவேக திறன்கொண்ட தெளிப்பான் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்க பின்னேற்பு மானியமாக ரூ.ஆயிரம், மஞ்சள் ஒட்டுப் பொறி 10 எண்கள் மற்றும் ஒட்டுவதற்காக விளக்கெண்ணெய் 100 மில்லி, கயிறு ஆகிவற்றுடன் கிரைசோபெர்லா இரை விழுங்கி முட்டை கொண்ட அட்டைகள் 1,000 எண்களும் வழங்கப்படுகின்றன. இரை விழுங்கி முட்டைகள் வழங்கப்படுவதால் தென்னந்தோப்புகளில் எக்காரணம் கொண்டும் பூச்சி மருந்து தெளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.




தற்போதைய செய்திகள்