மாநிலம் முழுதும் 80 இடங்களில், தோட்டக்கலை துறைக்கு பண்ணைகள் உள்ளன. இங்கு காய்கறி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, குறைந்த விலையில், விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது, தடை உத்தரவினால் வெளிமாநில காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. பல மாவட்டங்களில், காய்கறி அறுவடை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. புதிதாக காய்கறி செடிகளை சாகுபடி செய்தால் தான், அடுத்த சில மாதங்களுக்கு, காய்கறிகள் தேவையை சமாளிக்க முடியும்.
எனவே, தோட்டக்கலை துறை பண்ணைகளில், 23 கோடி காய்கறி நாற்றுக்களை உற்பத்தி செய்யும் பணி துவங்கி உள்ளது. இதற்காக, அரசிடம் இருந்து, ரூ.10 கோடியை, வேளாண் துறை செயலர், ககன்தீப் சிங் பேடி, தோட்டக்கலைத் துறை இயக்குனர், சுப்பையன் ஆகியோர் பெற்று கொடுத்து உள்ளனர். இந்த நிதியை பயன்படுத்தி, தக்காளி, வெங்காயம், வெண்டை, கத்தரி, பாகற்காய், கோஸ், மிளகாய் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, ஒரு நாற்று, ரூ.1க்கு, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
