width:605px height:339px செய்திகள்

விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வலியுறுத்தல்




உழவர் பாதுகாப்பு திட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஆர்.மதுசூதனன், ஆர்.குமார்ர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது : கரோனா பாதிப்பு காரணமாக மத்திய அரசில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு ரூ.2,000 முன்கூட்டியே அவர்களது வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று அறிவித்து, அதன்படி மாவட்டத்தில் பல விவசாயிகளுக்கு நிதி வரவாகி உள்ளது. ஆயினும் ஒரு சில விவசாயிகளுக்கு இன்னும் நிதி வரவில்லை. ஆகவே இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் இந்த நிதியுதவி வருவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் பதிவு செய்து உள்ளார்கள். கரோனாவால் நீடித்த ஊரடங்கு காரணமாக சிறு, குறு விவசாயிகள் உற்பத்திப் பொருளுக்கு ஏற்ற விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையையும், விவசாய தொழிலாளர்கள் வேலையில்லாத நிலைமையை கணக்கில் எடுத்துக் கொண்டு சிறு, குறு விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும். விவசாய வேலைகளுக்கும், காய்கறிகள் அறுவடை செய்யும் பணிக்கும் தேசிய ஊரக வேலைத்திட்ட பணியாளர்களை பயன்படுத்திட உரிய வழிகாட்டுதலை உருவாக்கிட வேண்டுகிறோம் என்று அதில் கூறியுள்ளனர்.




தற்போதைய செய்திகள்