width:800px height:449px செய்திகள்

பண்ணைகளில் நீர்த்தெளிப்பான் மூலம் கோழிகள் குளிர்விப்பு




கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வயதான கோழிகள் இறக்க நேரிடுகிறது. இதனால் நாமக்கல் பண்ணைகளில் நீர்த்தெளிப்பான்கள் மூலம் கோழிகளை குளிர்விக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழக அளவில், நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், 1,100க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இதில் 90 சதவீத பண்ணைகள் நாமக்கல் மாவட்டத்தில் தான் உள்ளன. இதில், 4 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு, அதன் மூலம் தற்போது தினமும் 2.50 கோடி அளவில் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை உள்ளூர் தேவைக்கும், பிற மாநிலங்களுக்கும் அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், கோழிகள் வழக்கத்தைக் காட்டிலும் மிகவும் சோர்வான நிலையில் காணப்படும். இதனால் முட்டை உற்பத்தியும் குறையும்.

இந்நிலையில், வெயிலின் தாக்கத்தில் இருந்து கோழிகளை பாதுகாக்க ஒவ்வொரு பண்ணைகளிலும் வெப்பம் தாக்காதவாறு பச்சை நிற படுதா பொருத்தப்பட்டும், கோழிகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டின் மேல்பகுதியில், நீர்த்தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோழியை வெப்பத்தில் இருந்து பாதுகாக்காக ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, இந்த நீர்த்தெளிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கோழிகள் தீவனத்தை எடுப்பதிலும், முட்டையிடுவதிலும் பிரச்னையிருக்காது. அவ்வாறு நீர்த்தெளிப்பான்கள் இல்லாத சிறிய பண்ணைகளில் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கோழிகள் இறப்பதற்கான வாய்ப்புள்ளது.   

நாமக்கல் மண்டலத்தில் வெயிலின் அளவு தற்போதைய நிலையில் சராசரி நிலையில் உள்ளது. அவை 103, 105 டிகிரியை தொடும்பட்சத்தில் கோழிகளுக்கான பாதிப்பு அதிகரிக்கலாம். தற்போதைய சூழலில், 10 சதவீத அளவில் வயது முதிர்ந்த, நோய் தாக்கிய, சரியாக முட்டையிடாத கோழிகள் இறப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பண்ணையாளர்கள் கூறியதாவது : பண்ணைகளை பொறுத்தமட்டில், காற்றோட்ட வசதியிருந்தால் தான் கோழிகள் நோய் தாக்காமல் வளரக்கூடும். குஞ்சுகளாக அவற்றை விட்டால், 20 வாரத்துக்கு பின் தான் முட்டையிடும். அதைத் தொடர்ந்து, 72 வாரங்கள் வரை அவை முட்டையிடும். ஆண்டுக்கு ஒரு கோழி 320 முதல் 350 வரையில் முட்டையிடும். 72வது வாரத்துக்கு பின் அவை இறைச்சிக்காக விற்பனை செய்யப்படும்.

கோடையின் போது, கோழிகளை பாதுகாக்க பண்ணைகளில் நீர்த்தெளிப்பான்கள் வைத்துள்ளோம். அவ்வப்போது திறந்து விடுவோம். இதன் மூலம் கோழிகள் வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும். தற்போதைய நிலையில், வெயிலின் சூடு தாங்காமல் கோழிகள் சில இறக்க நேரிடுகிறது. வெயில் படாதவாறு படுதா கட்டி வருகிறோம். காற்றோட்ட வசதியையும் அதிகப்படுத்தியுள்ளோம். கோழிகளின் இறப்பு என்பது வெயில் காலத்தில் வழக்கமாக இருக்கக் கூடியது தான் என்றனர்.

 




தற்போதைய செய்திகள்