தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் ஆதாரம் உள்ள பகுதிகளில் கோடை நெல், முன் பட்ட குறுவை, பருத்தி உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, யூரியா தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், அதற்கான ஏற்பாடுகளை வேளாண்மைத் துறை மேற்கொண்டது.
சில வாரங்களுக்கு முன்பு விளைபொருள்கள், இடுபொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து, உர மூட்டைகள் அனுப்பப்பட்டு வருவதோடு, நடமாடும் உர விற்பனையும் செய்யப்படுகிறது. ஆனாலும், சில பகுதிகளில் யூரியா கிடைக்கவில்லை என்ற புகாரும் தொடர்கிறது.
கடந்த ஆண்டைவிட நிகழாண்டு கிட்டத்தட்ட இரு மடங்கு கூடுதலாக யூரியா உர விநியோகம் செய்யப்பட்டுள்ளது என வேளாண்மைத் துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாவட்டத்தில் 4,000 டன் மட்டுமே யூரியா விற்பனையானது. நிகழாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை 7,000 டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வேளாண் துறை அலுவலர்கள் மேலும் தெரிவித்தது: தற்போது நெல், பருத்திக்கு மட்டுமே யூரியா உரம் தேவைப்படும். மாவட்டத்தில் கோடை நெல், முன்பட்ட குறுவை, பருத்தி போன்றவை கிட்டத்தட்ட 30,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. அதாவது, 75,000 ஏக்கரில்தான் சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு ஒரு மூட்டை தான் யூரியா தேவைப்படும். ஆனால், 1.50 லட்சம் மூட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதிகபட்சமாக 5,000 டன்கள் தான் தேவைப்படும் என கணக்கிடப்பட்டது. ஆனால், 7,000 டன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தேவையான அளவைவிட கூடுதலாக வாங்குவதால், தொடர்ந்து உரம் வரவழைக்கப்படுகிறது.
ஊரடங்கால் ஸ்பிக் ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. ஸ்பிக் ஆலையும் சில நாள்களாக இயக்கப்பட்டு வருவதால், அங்கிருந்தும் உரம் வரத்து தொடங்கியுள்ளது. எனவே, தட்டுப்பாடு இல்லாமல் உரம் வழங்கப்படுகிறது என்றனா் அலுவலா்கள்.
கடந்த ஆண்டுகளில் கோடைப் பருவத்திலும், குறுவை பருவத்திலும் யூரியா உரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்போது, ஊரடங்கு அமலில் இருப்பதால், முன்னெச்சரிக்கையாக கூடுதலாக உரங்களை வாங்கி இருப்பு வைப்பதே விற்பனை அதிகரிப்புக்கு காரணம் என்கின்றனா் விவசாயிகள். இதனால், உண்மையிலேயே யூரியா தேவைப்படும் விவசாயிகள் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனா்.
