திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப் பாசன சாகுபடிகளை, விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். காய்கறி சாகுபடியோடு, பப்பாளி சாகுபடியையும் புதிதாக பல விவசாயிகள் துவக்கியுள்ளனர். குறிப்பாக குறிச்சிக்கோட்டை, வாளவாடி உட்பட பகுதிகளில், ஆயிரக்கணக்கான பப்பாளி மரங்கள் பராமரிக்கப்படுகிறது.
இதில், வீரிய ஓட்டு ரக பப்பாளியில் இருந்து பால் பிரித்தெடுக்கப்பட்டு, பல்வேறு மருந்துகள் தயாரிப்புக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. பிற ரகங்களில் பப்பாளி பழங்கள் அறுவடை செய்யப்பட்டு, உடுமலை சந்தைக்கும், பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. குறைவான தண்ணீரில், அதிக வருவாய் கிடைக்கும் என்பதால் அதிகளவில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கால், பிற மாவட்டங்களுக்கு பப்பாளி பழங்கள் செல்வது தடைபட்டுள்ளது. மேலும், உள்ளூர் சந்தைகளிலும், தேவை குறைவாகவே உள்ளது. இதனால், அறுவடைக்கு தயராக இருந்தும், பழங்களை அப்படியே மரங்களில் விட்டு, அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பப்பாளி விற்பனைக்கு தோட்டக்கலைத்துறை சார்பில், நடவடிக்கை எடுத்து உதவினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
