width:600px height:413px செய்திகள்

தர்ப்பூசணி விலை சரிவால் விவசாயிகள் கவலை




ஊரடங்கால் சென்னை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களிலிருந்து வியாபாரிகள் வராததால், தர்ப்பூசணி, முலாம் பழங்களை உள்ளூர் வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் மட்டுமே விற்பனை செய்ய முடிகிறது. இதனால், உற்பத்திச் செலவைக்கூட ஈடுகட்ட முடியவில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 7,000 ஏக்கரில் விவசாயிகள் தர்ப்பூசணி, முலாம் பழங்களை சாகுபடி செய்திருந்தனர். அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பழங்களை அறுவடை செய்ய முடியாமலும், பிற நகரங்களிலிருந்து வியாபாரிகள் வராததாலும், அறுவடை செய்த பழங்களை உள்ளூர் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து, செலவுத் தொகைகூட கிடைக்காமல் சுமார் 2,000 விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் பகுதி விவசாயி ஒருவர கூறியதாவது: கோடை காலத்தில் தர்ப்பூசணி, முலாம்பழங்கள் விற்பனை அமோகமாக இருக்கும். விலையும் கட்டுப்பிடியான அளவில் இருக்கும்.

கடந்தாண்டு தர்ப்பூசணி ஒரு டன் சுமார் ரூ.12,000 வரை விற்பனையானது. சென்னை, பெங்களூரு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வந்து பழங்களை வாங்கிச் சென்றனர். தற்போது தடையில், விவசாயத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும், பிற நகரங்களிலிருந்து வியாபாரிகள் வராததால், குறைந்த விலைக்கே விற்பனையாகிறது.

ஏக்கருக்கு 10 டன் வரை தர்ப்பூசணி பழங்கள் கிடைத்தும், டன் ஒன்று ரூ.5,000 என்றளவிலேயே விற்பனையாகிறது. உற்பத்திச் செலவோ ஏக்கருக்கு ரூ.60,000 வரை ஆகிறது. இதனால், நஷ்டம் ஏற்படுகிறது என்றார். கையில் இருந்த பணத்தை விவசாயத்தில் முதலீடு செய்துவிட்டு, கரோனா ஊரடங்கு காலத்தில் செலவுக்குக்கூட பணம் இல்லாமல் அவதிப்படும் சுமார் 2,500 விவசாயக் குடும்பங்களைக் காக்க அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாவும் அவர் தெரிவித்தார்.




தற்போதைய செய்திகள்