width:605px height:339px செய்திகள்

ஊரடங்கு காலத்திலும் தொய்வில்லாமல் நடக்கும் வேளாண் ஆராய்ச்சி பணி




கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உழவர்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு வேளாண் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இங்கு நடைபெறும் ஆராய்ச்சிப் பணிகள் அனைத்தும் அரசின் அறிவுறுத்தலின் படி பல்வேறு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளோடு நடந்து வருகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையில், மண் பரிசோதனை, உழவர்களுக்கு உர பரிந்துரை, மண் ஆய்வு மற்றும் பயிர் ஏற்புத்திறன் திட்டம், நுண்ணூட்டச் சத்து ஆய்வு, நீண்டகால உரப் பரிசோதனை ஆய்வு போன்றவை நடைபெற்று வருகின்றன. தற்பொழுது இந்தத் துறையின் மூலம் உழவர்களுக்கு பல்வேறு பயிர்களுக்கான உரப்பரிந்துரை மற்றும் உர மேலாண்மை உத்திகள் குறித்த செய்திகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத் துறையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன் இயங்கிவரும் அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டமான மண் ஆய்வு மற்றும் பயிர் ஏற்புத்திறன் தொடர்பளவுத் திட்டத்தில் கடந்த 51 ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு மண் வகைகளுக்கேற்ப 32 பயிர்களுக்கு மண் வளத்திற்கும் மகசூல் இலக்கிற்கும் ஏற்ற உர பரிந்துரைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தை மத்திய பிரதேச மாநிலம் போபாலிலுள்ள இந்திய மண்ணியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள இத்திட்டத்திற்கான திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரதீப் டே கண்காணித்து வருகிறார். இந்த ஊரடங்கு காலத்தில் இத்திட்டத்தின் ஆய்வு தொய்வில்லாமல் நடைபெற இத்திட்டம் நடைபெறும் அனைத்து இடங்களில் உள்ள திட்ட பொறுப்பாளர்கள் அனைவரிடமும், திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரதீப் டே, காணொலி காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டு பொறுப்பாளர்களுக்கு அறிவுரைகளையும் இத்தருணத்தில் மேற்கொள்ள வேண்டிய உத்திகளையும் கூறி வருகின்றார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து, அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டமான மண் ஆய்வு மற்றும் பயிர் ஏற்புத்திறன் தொடர்பளவு திட்டத்தின் பொறுப்பாளர் இணைப் பேராசிரியர் முனைவர் சு.மரகதம், பங்கேற்றார். இதுவரை, இரண்டு முறை ஆய்வு நடத்தி பின்வரும் சில முக்கிய அறிவுரைகளை பின்பற்றுமாறு முனைவர் பிரதீப் டே கேட்டுக்கொண்டார்.

• நாட்டில் வேளாண் பணி எந்த ஒரு சூழ்நிலையிலும் தொய்வில்லாமல் நடைபெற்றால் தான் நாட்டின் உணவு பாதுகாப்பு உறுதி செய்ய முடியும். எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையில் உழவர்களுக்கு தேவையான அறிவுரைகள் அனைத்தும் குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்பட வேண்டும்.
• மண் ஆய்வு செய்ய முடியாத இந்நிலையில், அந்த பகுதியின் மண் வரைபடம் அல்லது அப்பகுதியின் மண்வள பதிவேட்டின் மூலம் மண் வளத்தை அறிந்து மண் ஆய்வு மற்றும் பயிர் ஏற்புத் திறனுக்கேற்ப உர பரிந்துரை வழங்கிட வேண்டும்.

மண் ஆய்வு மற்றும் பயிர் ஏற்புத்திறன் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய இடங்கள் தூரத்தில் இருக்கும் போது, முன்பே வரையறுக்கப்பட்ட சமன்பாடுகளை அருகில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தின் உதவியோடு உழவர்களின் வயல்களில் சோதனை சரிபார்ப்பு செய்யலாம்.

எதிர்வரும் காரிப் காலத்திற்கு தேவையான உரங்கள் அனைத்தும் கிடைப்பது உறுதி இல்லாத இந்த சூழ்நிலையில், உரங்களை சீரிய முறையில் பயன்படுத்தும் மேலாண்மை உத்திகளை உழவர்களுக்கு கூற வேண்டும்.

மேலும் சமச்சீர் உர மேலாண்மைக்கான உத்திகளையும் இத்தருணத்தில் கண்டறிய வேண்டும்.

மேலும் ஒரு சில குறிப்பிட்ட பயிர்களுக்கான பின்பற்றப்பட வேண்டியவை மேலாண்மை முறைகளை பற்றியும் எடுத்துரைத்து இந்த கரோனா நோய் தொற்று உள்ள இக்கட்டான சூழ்நிலையில் நாம் தொழில்நுட்பங்களை சரி வர கையாண்டு உழவர்களுக்கு உதவி செய்து நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றும் கூறினார்.

மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இயற்கை வள மேலாண்மை இயக்ககம், மண்ணியல் துறை வல்லுநர்கள் உழவர்களுக்கு பயிர்களுக்கேற்ற உர பரிந்துரைகளையும் மற்றும் உர மேலாண்மை முறைகளையும் குறித்து தொலைபேசி மூலம் தெரிவித்து வருகின்றனர். பல்கலைக்கழத்திலிருந்து முக்கிய பயிர்களுக்கு ஏற்ற பயிர் சாகுபடிக்கான தொழில்நுட்பம், உர மேலாண்மை, பயிர் பாதுகாப்பு போன்ற நுட்பங்கள் தொகுக்கப்பட்டு உழவர்களை சென்றடையும் வகையில் ஆவண செய்யப்பட்டு வருகின்றது.

 




தற்போதைய செய்திகள்