width:615px height:350px செய்திகள்

செடியிலேயே காய்ந்து வீணாகும் மிளகாய்




தர்மபுரி மாவட்டத்தில் மிளகாய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஏரியூர், பெரும்பாலை, நெருப்பூர், செல்லமுடி, பூச்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்து உள்ளனர். இங்கு சாகுபடி செய்யப்படும் மிளகாயை தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் சேலம், கொளத்தூர், மேட்டூர், ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு மிளகாய் சாகுபடி முடிந்த நிலையில் அறுவடை செய்யும் பருவத்தில் கரோனா காரணமாக ஊரடங்கு உள்ளது. இதனால் கொள்முதல் நடக்காததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்த மிளகாய் அறுவடை செய்யப்படாமல் செடிகளிலேயே காயும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் மிளகாயை அறுவடை செய்ய தொழிலாளர்கள் வராததால் செடியிலேயே காய்ந்து வீணாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக மிளகாய் சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது: ஏரியூர் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அறுவடை சீசன் தொடங்கி உள்ளது. ஒரு ஆண்டுக்கு தேவையான மிளகாயை வியாபாரிகள் கொள்முதல் செய்வார்கள். தற்போது ஊரடங்கு காரணமாக மண்டிகள் மூடப்பட்டு உள்ளதால் மிளகாய் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் நடக்கவில்லை. இதனால் மிளகாயை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரவில்லை. மிளகாய் அறுவடை செய்ய தொழிலாளர்களும் வருவது இல்லை. இதனால் மிளகாய் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

பழுத்த மிளகாய்கள் பறிக்கப்படாமல் செடிகளிலேயே காய்ந்து கீழே விழுந்து வீணாகி வருகிறது. உரிய பருவத்தில் அறுவடை செய்தால் அடுத்தடுத்து 7 முறை வரை குறிப்பிட்ட இடைவெளியில் அறுவடை செய்வோம். விளைச்சலும் அறுவடையும் முறையாக நடந்தால் ஒரு ஏக்கரில் ரூ.3 லட்சம் வரை கூட வருமானம் கிடைக்கும். ஆனால் தற்போது கடும் நஷ்டத்திற்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் மிளகாய் சாகுபடி செய்து பாதிப்புக்குள்ளாகி இருக்கும் விவசாயிகளை கணக்கெடுத்து அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 




தற்போதைய செய்திகள்