width:px height:px செய்திகள்

வாழையை பாதுகாக்க விவசாயிகளின் புதிய முயற்சி




திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாரத்தில், தென்னை, வாழை, தக்காளி, வெங்காயம், வெண்டை, புடலை என, பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகின்றன. அதில், அதிகப்படியான நேந்திரன் வாழைகள், கேரளாவிற்கு அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், ஆண்டு தோறும், வெயில், மழை, மற்றும் பலத்த காற்று காரணமாக, வாழைகள் சேதமாவது வழக்கம். இவ்வாறு, கடந்த சில தினங்களுக்கு முன் வீசிய, சூறைக்காற்றால், பல ஆயிரக்கணக்கான வாழைகள் சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் பலர் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்நிலையில், பல்லடத்தில் அடுத்த பருவாய் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், புதிய முறையில் வாழைகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது: வழக்கமாக வெயில், மழையால் வாழைகள் சேதமடைந்தாலும், காற்றினால் ஏற்படும் பாதிப்பே அதிகம். பலத்த காற்றுக்கு, வாழைகளின் இலைகள் ஒன்றோடு ஒன்று மோதுவதால், மரங்கள் வலுவிழந்து கீழே விழுகின்றன. எனவே, இலைகளை அவற்றை தனித்தனியாக கயிற்றை கொண்டு கட்டியுள்ளேன். இதனால், காற்று வாழை மரங்களுக்கு இடையே புகாதபடி, வாழைகளை சுற்றிலும், அகத்தி மரத்தை நட்டுள்ளேன். ஊரடங்கு காரணமாக, வாழைகளை கேரளாவுக்கு அனுப்புவது கேள்விக்குறியாக உள்ளது. இருந்தும், ஓரிரு மாதங்களில் நிலைமை மாறும் என்ற நம்பிக்கையால், இந்த நடவடிக்கை எடுத்துள்ளேன். அகத்தி மரங்களால், வாழைகள் பாதுகாக்கப்படுவதுடன், இரட்டிப்பு வருமானமும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.




தற்போதைய செய்திகள்