width:605px height:339px செய்திகள்

குறுவை சாகுபடிக்கு தயாராகும் டெல்டா விவசாயிகள்




மேட்டூர் அணையில் ஜூன், 12ல் திறக்கப்படும் காவிரி நீர் மூலம், டெல்டா மாவட்டங்களில், 9 லட்சம் ஏக்கரில், குறுவை சாகுபடி நடப்பது வழக்கம்.
கடந்த எட்டு ஆண்டுகளாக, கர்நாடகா காவிரி நீரை தர மறுத்ததால், டெல்டாவில், குறுவை சாகுபடி பொய்த்துப் போனது. இந்நிலையில், நடப்பாண்டு, அணையில் போதுமான நீர் இருப்புள்ளது. வானிலை மையமும், குறிப்பிட்ட காலத்தில், தென் மேற்கு பருவ மழை துவங்கும் என அறிவித்துள்ளது. இதனால், ஜூன் 12ல், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற நம்பிக்கையில், நிலங்களை உழுது, விவசாயிகள் தயார்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து கடைமடை விவசாயிகள் கூறியதாவது: மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், தடையின்றி கடைமடை வரை வர ஏதுவாக, குடிமராமத்து பணிகள் திட்டத்தில், பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும். வேளாண் பொருட்களை விவசாயிகள் எடுத்துச் செல்வதில் தடையிருந்தால், தொடர்பு கொள்ள, மாநிலம் முழுவதும் தொலைபேசி எண்களை அறிவித்தனர். மேலும், வேளாண் பொருட்களை தடையின்றி எடுத்துச் செல்ல, வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

போதுமான அளவில், குறுகிய கால விதை நெல்கள் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுப்பதோடு, குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தையும் அறிவிக்க வேண்டும் என கூறினர். டெல்டா மாவட்டங்களில், கடந்த ஆண்டு தூர் வாரும் பணிகள் துவங்கிய நிலையில், தண்ணீர் திறக்கப்பட்டதால், பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு, குடிமராமத்து திட்டத்தில், தூர் வாரும் பணிகளை துவங்குமாறு, அரசு அறிவித்து உள்ளது.

இதன்படி, தஞ்சை மாவட்டத்தில், ரூ.35.38 கோடியில், 109 பணிகளும், திருவாரூர் மாவட்டத்தில், ரூ.20.23 கோடியில், 88 பணிகள் நடக்கின்றன. நாகை மாவட்டத்தில், ரூ.35.05 கோடியில், 131 பணிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில், ரூ.1.74 கோடியில், நான்கு பணிகளும் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் துவங்கப்பட்டுள்ளன.




தற்போதைய செய்திகள்