width:1050px height:700px கிழங்கு வகைகள்

சக்கரைவள்ளி கிழங்கு கிழங்கு
சக்கரைவள்ளி கிழங்கு நிலத்தில் படரும் கொடிவகை தாவரங்களில் ஒன்று.சக்கரைவள்ளி செடியின் வேர் பகுதியே சக்கரவள்ளிக்கிழங்காகும். வேர்ப் பகுதிகளில் விளையும் இந்த கிழங்குகள் பெரிதாகவும், அடர்த்தியாகவும், பல சத்துக்கள் நிறைந்தும் காணப்படுகிறது.

இது வெப்பமண்டலத்தில் விளையும் தாவர வகையாகும்.

உலகெங்கும் விளையும் பயிர்களில் அதிகளவில் விளைந்து ஏழாவது முக்கிய உணவுப் பொருளாகத் திகழ்கிறது.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள்

கோ 1, கோ 2, கோ 3 மற்றும் கோ – சிஐபி 1, ஐ ஜி எஸ் பி – 14, வி 6, வி 8, வி 12, எச் 1 மற்றும் தமிழ் நாட்டு இரகங்கள் – எஸ்பி உள்ளூர், முசிறி தண்டல், எஸ்பி 4, எஸ்பி 13, எஸ்பி 18 ஆகிய இரகங்கள் உள்ளன.

பருவம்

நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களில் ஜூன் – ஜூலை மாதங்களிலும், மற்ற இடங்களில் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களிலும் சாகுபடி செய்யலாம்.

மண்

நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்துள்ள செம்மண், கரிசல் மண் நிலங்களில் நன்கு வளரும் தன்மை கொண்டது. களிமண் பூமி ஏற்றதல்ல. மண்ணின் கார அமிலத்தன்மை 5.6 முதல் 6.7 வரை இருக்க வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக உழுது பண்படுத்திய பிறகு எக்டருக்கு 25 டன் என்ற அளவில் தொழு உரம் இட்டு 60 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.

விதையளவு

ஒரு எக்டர் நடவு செய்ய 80,000 தண்டுகள் தேவைப்படும்.

விதைத்தல்

மேலை நாடுகளில் இதை கிழங்குகளிலிருந்து விதைப்பயிராகப் பயிரிடுகிறார்கள். இந்தியாவில் நுனிக்கொடிகள் மூலம் பயிரிடப்படுகிறது. நடவு செய்ய நுனிக் கொடிகளைத் தேர்ந்தெடுத்து அதை 20 செ.மீ நீளத்திற்குத் துண்டுகளாக்கி நடவு செய்ய வேண்டும். கொடியின் மத்தியிலுள்ள பாகத்தையும் உபயோகிக்கலாம். நடுவதற்கு முன்னர் தண்ணீர் கட்டி நுனிக்கொடித் துண்டுகளை 20 செ.மீ நீளத்திற்குத் தயார் செய்து பாரின் பக்கவாட்டில் 15 முதல் 30 செ.மீ இடைவெளியில் வரிசையாக நடவேண்டும். மத்தியில் உள்ள கொடித் துண்டுகளை உபயோகித்தால் நுனி, அடி இரண்டும் வெளியே இருக்கும்படி மத்தியில் மட்டும் மண்ணில் புதைத்து நடவேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்ட பின் மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் விட வேண்டும். பின்பு மண்ணின் ஈரப்பதத்திற்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

நடுவதற்கு முன், எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 60 கிலோ சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும். முப்பது நாட்கள் கழித்து மறுபடியும் அதே அளவு தழை, மணி, சாம்பல் சத்துக்களை இட்டு மண் அணைக்கவேண்டும். எக்டருக்கு 20 கிலோ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் உரத்தை அளித்தால் பரிந்துரைக்கப்படும் தழைச்சத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் குறைத்து இட வேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள்

கிழங்குகள் நல்ல முறையில் உருவாக நட்ட 15 நாட்கள் கழித்து எத்ரல் என்ற பயிர் ஊக்கியை 15 நாட்கள் இடைவெளியில் ஐந்து முறை தெளிக்கவேண்டும்.

பாதுகாப்பு முறைகள்,

களை நிர்வாகம்

களைகளை மாதத்திற்கு ஒரு முறையாக இரண்டு மூன்று தடவைகள் எடுக்கவேண்டும். செடிகள் நட்ட 60 நாட்கள் கழித்து கொடிகளை அடிக்கடி தூக்கிப் புரட்டிப் போட்டு நல்ல வேர்க்கிழங்குகள் உண்டாகும்படி செய்யவேண்டும்.

பயிர் பாதுகாப்பு
கூன்வண்டு தாக்குதல்

கூன்வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு பென்தியான் 625 மில்லி, கிழங்குகள் எடுக்க ஆரம்பிக்கும் போது 21 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவேண்டும்.

அழுகல் நோய்

அழுகல் நோயை கட்டுப்படுத்த ஒரு கிராம் கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து ஊற்றவேண்டும்.

அறுவடை

பொதுவாக 100லிருந்து 130 நாட்களில் கிழங்குகளை அறுவடை செய்யலாம். அறுவடைக்குத் தயாராக உள்ள கொடிகளின் அடிப்பாகம் பழுப்பு நிறமாக மாறும். கொடிகளின் அடிப்பாகத்தில் நிலத்தில் விரிசல் ஏற்படும். சில கொடிகளை அகற்றி விட்டுக் கிழங்குகள் நன்கு முற்றிவிட்டனவா என்று பார்த்துப் பின்னர் அறுவடை செய்யவேண்டும். கிழங்கை வெட்டிப்பார்த்தால் பால் போன்ற திரவம் வரும். அது விரைவில் முதிர்ச்சி அடைவதற்கான அறிகுறியாகும். அறுவடைக்கு மூன்று நாட்களுக்கு முன் தண்ணீர் பாய்ச்சினால் கிழங்குகளை சேதப்படாமல் அறுவடை செய்ய முடியும்.

மகசூல்

ஒரு எக்டருக்கு 25-30 டன் கிழங்குகள் வரை கிடைக்கும்.
Site For Sale Contact : 9894832938