சேப்பங்கிழங்கின் மாவுச்சத்து, இதன் கீரையின் மருத்துவக் குணங்கள் முதலியவற்றிற்காக இந்தியா உட்பட பல நாடுகள் சேப்பங்கிழங்கு உற்பத்தியில் அதிக ஈடுபாடு காட்டிவருகின்றன.
இரகங்கள்
கோ 1, தாரா ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
மண்
தண்ணீர் தேங்காத செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றது.
பருவம்
வைகாசிப் பட்டம், தைப் பட்டங்கள் சாகுபடிக்கு ஏற்ற பருவங்கள் ஆகும்.
நிலம் தயாரித்தல்
தேர்வு செய்த நிலத்தில் தொழு உரத்தை இட்டு, இரண்டு முறை உழவு செய்து 10 நாட்கள் ஆறப்போட வேண்டும். பிறகு, நிலத்தில் முளைத்து வரும் களைகளை உழவு செய்து நிலத்தைச் சமப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு தேவையான அளவில் பார் எடுத்துக் கொள்ள வேண்டும்.
விதையளவு
ஏக்கருக்கு 500 கிலோ அளவில் விதைக்கிழங்குகள் தேவைப்படும்.
விதைநேர்த்தி
200 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ சூடோமோனஸ் கலந்து முளைப்பு எடுத்த 500 கிலோ விதைக் கிழங்குகளை 10 நிமிடங்கள் ஊறவைத்து விதைநேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும். அறுவடை செய்த கிழங்குகளை இரண்டு மாதங்கள் நிழலில் கொட்டி வைத்தால், முளைப்பு எடுக்கும். இவற்றைத்தான் விதைக்கிழங்குகளாகப் பயன்படுத்த வேண்டும்.
விதைத்தல்
நடவு வயலில் தண்ணீர் கட்டி, பாரின் ஒரு பகுதியில் முக்கால் அடி இடைவெளியில் ஒரு விதைக்கிழங்கு வீதம் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
நடவு செய்த 7-ம் நாளில் வேர்பிடித்து வளரத் தொடங்கும். இதற்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதால் 3 முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாசனம் செய்ய வேண்டும்.
சேப்பங் கிழங்கு
உரங்கள்
50ம் நாளில் செடிகளை மையமாக வைத்து, கரையைப் பிரித்துக் கட்டி 300 கிலோ எருவுடன் கலப்பு உரத்தைக் கலந்து செடிகளுக்கு வைக்க வேண்டும். மாதம் ஒரு முறை 5 கிலோ சூடோமோனஸ் கலவையைத் துணியில் கட்டி பாசனத் தண்ணீர் செல்லும் வாய்க்காலில் வைக்க வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
25-ம் நாளில் களை எடுக்க வேண்டும். அதன் பின் களை அதிகமாக தோன்றினால் மீண்டும் ஒரு களை எடுக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
70ம் நாளில் டேங்குக்கு (10 லிட்டர்) 100 மில்லி வீதம் பஞ்சகாவ்யாவைக் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 10 டேங்குகள் வீதம் தேவைப்படும். இதை பூச்சி, நோய்கள் பெரிதாகத் தாக்குவதில்லை.
அறுவடை
25-ம் நாளில் இருந்து வேர்கள் போல உருவாகி, 65ம் நாளில் கிழங்குகள் பிரிய ஆரம்பிக்கும். பின் 180-ம் நாளில் கிழங்குகள் வெட்டுக்குத் தயாராகிவிடும்.
மகசூல்
ஒரு ஏக்கருக்கு 8 முதல் 12 டன்கள் மகசூல் கிடைக்கும்.
