width:800px height:600px பழங்கள்

லிச்சி பழம் சாகுபடி




சீனாவை பூர்வீகமாக கொண்ட இந்த பழம் இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக கிடைக்கிறது.

இரகங்கள்

சீனா, பம்பாய் போன்ற லிச்சி கன்று ரகங்கள் தமிழ்நாட்டின் தட்பவெப்பத்தை தாங்கி வளரக்கூடியவை.

பருவம்

அக்டோபர்- நவம்பர் மாதங்கள் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

மண்

நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

நிலம் தயாரித்தல்

நடவு செய்யும் முன் தோட்ட நிலங்களை நன்றாக கிளறி உழவு செய்ய வேண்டும். பின்னர் 7 மீட்டர் இடைவெளியில் குழிகளை எடுக்க வேண்டும். குழிகளில் இயற்கை உரங்களை நிரப்பி ஆற போட வேண்டும்.

விதையளவு

ஒட்டுச்செடிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நடவு முறையை பொறுத்து ஒரு எக்டருக்கு 200 முதல் 300 மரங்களை நடவு செய்யலாம்.

விதைத்தல்

7 மீட்டர் இடைவெளியில் தயார் செய்துள்ள குழிகளின் மையப்பகுதியில் தரமான கன்றுகளை தேர்வு செய்து நட வேண்டும்.

நீர் நிர்வாகம்

செடிகள் நட்டவுடன் ஒரு தண்ணீரும், மூன்றாம் நாள் ஒரு தண்ணீரும் விட வேண்டும். அதன் பின் வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சுவது அவசியம். லிச்சி மரக்கன்றுகள் வளர்ந்தவுடன் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது.

உரங்கள்

கன்றுகள் வளரத் தொடங்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு மாத இடைவெளியிலும் ஒரு கிலோ தழைச்சத்து, அரை கிலோ மணிச்சத்து மற்றும் ஒரு கிலோ சாம்பல் சத்து உரங்களை இடவேண்டும். கன்றுகள் செழுமையாக வளர்ச்சி பெற்ற நிலையில் 5 கிலோ தொழு உரம் உரம், 150 கிராம் தழைச்சத்து, 150 கிராம் மணிச்சத்து மற்றும் 150 கிராம் சாம்பல் சத்தை மண்ணுடன் கலந்து இட வேண்டும்.

பழங்கள் காய்க்கத் தொடங்கும் நேரத்தில் 100 கிலோ தொழுஉரம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 2 கிலோ தழைச்சத்து, 2 கிலோ மணிச்சத்து, 800 கிராம் சாம்பல் சத்து ஆகியவற்றை தொடர்ந்து அளிக்க வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

செடிகள் நன்கு வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை தேவையற்ற கிளைகளை நீக்கி விட வேண்டும். இதனால் செடிகளின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.

பயிர் பாதுகாப்பு சாம்பல் நோய்

சாம்பல் நோயை கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 0.1 சதம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

வண்டுகள்

வண்டுகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த மாலத்தியான் மருந்தை ஒரு லிட்டர் நீரில் இரண்டு மில்லி என்ற அளவில் தெளிக்கவேண்டும்.

அறுவடை

லிச்சி மரங்கள் வளர்ந்த 7 முதல் 9 ஆண்டுகளில் காய்க்க தொடங்கும். பழுத்த பழங்களை சேதாரம் இல்லாமல் அறுவடை செய்ய வேண்டும்.

மகசூல்

சாதாரண இரகங்களில் ஒரு அறுவடைக்கு 80 கிலோ முதல் 90 கிலோ வரை மகசூல் கிடைக்கும். நல்ல இரக கன்றுகளாக இருந்தால் 100 முதல் 110 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

ஊடுபயிர்

லிச்சிமரங்களுக்கு இடையே ஊடுபயிராக முட்டைக்கோஸ், வெங்காயம், உருளைக்கிழங்கு, வெண்டை ஆகியவற்றை பயிர் செய்யலாம்.




தற்போதைய செய்திகள்