width:600px height:413px மற்ற சாகுபடி

நெல்லிக்காய் சாகுபடி
அரு நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு, மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது.

நெல்லிக்காய் எப்படி பயிரிடுவது…?

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பி.எஸ்.ஆர் 1 இரகமும், வட இந்திய இரகங்களான சாக்கியா, பனாரசி, என்.ஏ.7, கிருஷ்ணா, காஞ்சன் போன்ற இரகங்கள் தமிழகத்தில் பயிர் செய்யப்படுகின்றன. ஆயினும் பி.எஸ்.ஆர் 1 இரகமே தமிழகத்தில் சாகுபடி செய்ய உகந்ததாகவும், அதிக மருத்துவ குணம் கொண்டதாகவும் கருதப்படுகிறது.

ஒட்டுச் செடிகளுக்கு ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் சிறந்ததாகும். பெருநெல்லி மித வெப்ப மண்டலப் பயிர்வகையாக இருந்தாலும், வெப்பமண்டலப்பகுதியில் கூட தற்போது வெற்றிகரமாக சாகுபடி செய்யப்படுகிறது. கோடைக் காலங்களில் இலைகளை உதிர்த்து நீராவிப் போக்கினை கட்டுப்படுத்துவதால் சுமாார் 16 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கூட தாங்கிக் கொண்டு வாழும் தன்மை கொண்டது.

நெல்லி எல்லாவகை மண்ணிலும் நன்கு வளரும் தன்மையுடையது. வடிகால் திறனுள்ள செம்மண் மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை (PH) 6.5 முதல் 9.5 வரை தாங்கி வளரும். ஆயினும், இதன் வளர்ச்சி 7 முதல் 8.5 வரையிலான கார அமிலத்தன்மை கொண்ட மண்ணில் துரிதமாக வளரும்.

நடவு வயலை 2 (அ) 3 முறை ஆழமாக உழவு செய்து நிலத்தை பண்படுத்த வேண்டும். 2X2X2 அடி நீளம், அகலம், ஆழம் உள்ள குழியை எடுத்து ஒரு வாரக்காலத்திற்கு ஆறப் போடவேண்டும். நடவு செய்யும்போதே தண்ணீர் விட்டால் குழியின் அடிபாகத்தில் சூடு ஏறி, இளம் வேர் கருகிவிடும். எனவே, நடவுக்கு இரண்டு நாள் முன்பாகவே குழிகளில் தண்ணீர் ஊற்றி நன்றாக குளிர வைக்கவேண்டும்.

ஒட்டுச் செடிகள் தான் நடவுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஒட்டுச்செடிகள் வாங்கும் போது கவனமாக வாங்க வேண்டும். கன்றின் தண்டு பாகம் பருமனாக இருக்க வேண்டும். ஒட்டுக் கட்டியுள்ள பகுதியைப் பிரித்து ஒட்டு நன்றாக கூடி இருக்கிறதா என்று பார்த்தும் வாங்க வேண்டும். ஒட்டுக்கட்டி மூன்று மாதத்துக்கு மேல் ஆன கன்றாக பார்த்து வாங்க வேண்டும்.

குழிகளில் காய்ந்த குப்பை எரு 15 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு அரை கிலோ, மண்புழு உரம் ஒரு கிலோ ஆகியவற்றை குழியிலிருந்து எடுத்த மண்ணோடு கலந்து அடியுரமாகப் போட்டு குழியை மூடி, உயிர்நீர் பாய்ச்சவேண்டும். தயார் செய்துள்ள குழிகளில் காலை எட்டு மணிக்குள்ளாகவோ அல்லது மாலை மூன்று மணிக்கு பிறகோ நடவு செய்ய வேண்டும். வெயில் நேரத்தில் நடவு செய்வதை தவிர்க்க வேண்டும். வளமான மண்ணாக இருப்பின் இடைவெளி 18X18 அடி (வரிசைக்கு வரிசை 18 அடி இடைவெளி) விடவேண்டும். வளமற்ற மண்ணாக இருப்பின் 15 X 15 அடி இடைவெளிவிட்டு நடவு செய்யவேண்டும்.

குழிகளில் ஒட்டு கட்டிய பாகம் மேலே தெரியுமாறு நடவு செய்து, அருகாமையில் ஊன்றுகோல் நட்டு செடியுடன் சேர்த்து இறுக்கமின்றி கட்டி நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.

நெல்லி கன்று நல்ல வளர்ச்சி அடையும் வரை வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்யவேண்டும். நல்ல வளர்ச்சி பெற்ற காய்ப்பிலுள்ள மரங்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை (அ) மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்றவாறு நீர்ப்பாசனம் அளிக்கவேண்டும்.

எக்டருக்கு, மானாவாரி நெல்லி மரத்திற்கு சுமார் 80 கிலோ மக்கிய தொழு உரம் மழைக்காலம் துவங்கும் முன்பு மரத்திலிருந்து 2 அடி தள்ளி 1 அடி ஆழத்தில் குழி எடுத்து நிரப்பவேண்டும். இறவைக்கு மேற்கூறிய தொழு உரங்கள் இரண்டாப் பிரித்து மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இடவேண்டும்.

களர், உவர் நிலமாக இருப்பின் குழி ஒன்றுக்கு 10 கிலோ ஜிப்சம் கலந்து இடவும்.

நெல்லிக்கன்றுக்கு சுற்றி உள்ள களைகளை அகற்றி பராமரிப்பு செய்யவேண்டும்.

நெல்லிக்கன்றுகள் நட்ட முதலாம் ஆண்டு சுமாரான வளர்ச்சியே இருக்கும். இரண்டாமாண்டு முதல் வளர்ச்சி துரிதமாக காணப்படும். தரைமட்டத்திலிருந்து சுமார் 3 அடி உயரத்திற்கு பக்கக் கிளைகள் உருவாகாமல் அவ்வப்போது பக்கக் கிளைகளை வெட்டி விடவேண்டும். 3 அடிக்குமேல் வளரும் கிளைகளை, சூரியஒளி நன்கு படுமாறு நாலாப் பக்கமும் கிளைகள் சரியான இடைவெளியில் படருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குறுக்கும் நெடுக்குமாக உள்ள கிளைகள், காய்ந்த, நோய் மற்றும் பூச்சி தாக்கிய கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். நெல்லியில் ஒவ்வொரு மகசூல் எடுத்த பின்னர் கிளைகளின் நுனியில் இருந்து சுமார் 10 செ.மீ நீளம் விட்டு வெட்டி விடுவதன் மூலம் புது தளிர்கள் அதிகமாகத் தோன்றி அதிக பூக்கள் உருவாகும்.

ஒரு ஆண்டு முடிந்ததுமே காய்கள் வந்துவிடும். ஆனால், அதில் மகசூல் கிடைக்காது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு செடிகளைக் கிள்ளிவிட வேண்டும். மூன்றாம் ஆண்டு முதல் நல்ல மகசூல் கிடைக்கும்.

ஆண்டுக்கு இரண்டு முறை மகசூல் கிடைக்கும். ஜூன் மாத கடைசியில் பூ வந்தால், நவம்பர் மாதம் வரை அறுவடை செய்யலாம். ஜனவரியில் பூத்தால் ஏப்ரல் வரை காய்கள் கிடைக்கும். ஒவ்வொரு மகசூல் முடிந்ததும் கவாத்து செய்து, உரம் வைப்பது அவசியம். அப்படி செய்த பதினைந்தாவது நாள் பூக்க ஆரம்பிக்கும். அதிகமாக தண்ணீர் பாய்ச்சினால் பூ உதிர்ந்துவிடும். எனவே, காய்ச்சலும், பாய்ச்சலுமாக இருப்பது நல்லது.

நடவு செய்யப்பட்ட ஒட்டுக்கன்றுகள் 4வது வருடத்தில் இருந்து சுமார் 30 கிலோ முதல் 150 கிலோ நெல்லிக் கனிகள் மகசூலாகப் பெறலாம்.

 
Site For Sale Contact : 9894832938