width:px height:px பழங்கள்

ஆப்பிள் சாகுபடி




மத்திய ஆசியாவில்தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது.தற்போது, ஆப்பிள் உலகின் எல்லாவிதமான குளிர்ப் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது.

ஆசியா, ஐரோப்பா, அர்ஜென்டினா போன்ற இடங்களில் வசித்த மக்களின் உணவில், ஆப்பிள் ஒரு முக்கியமான பழமாக இருந்துள்ளது.தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம், மற்றும் ஏற்காடு பகுதியில் ஆப்பிள் சாகுபடி செய்யப்படுகின்றன.

 

இரகங்கள் :

ஐரிஷ் பீச், செளக்ஸ் பைபின், காரிடன், வின்ட்டர்ஸ்டீன், ரோம் ப்யூட்டி, பார்லின்ஸ் ப்யூட்டி, கோல்டன் டெலிசியஸ், ராயல் காலா, கேகேஎல் 1 (கொடைக்கானல் 1) ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

பருவம்

ஜீன் முதல் டிசம்பர் மாதம் வரை நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

மண்

நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் கலந்த வண்டல் மண் ஆப்பிள் பயிர் செய்வதற்கு மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிலத் தன்மை 5.8 முதல் 6.2 வரை இருக்க வேண்டும். ஆப்பிள் மரங்கள் நல்ல பலன் கொடுப்பதற்கு கடுமையான குளிரும் பனியும் அவசியம் தேவை.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது 4 x 4 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ நீளம், அகலம், ஆழத்தில் குழிகள் எடுத்து ஆற விடவேண்டும். மக்கிய தொழு உரம், மேல் மண் ஆகியவற்றை கலந்து இட்டு குழியை நிரப்பவேண்டும்.

விதைகள்

ஆப்பிள் மரங்கள் ஒட்டுப் போடுவதன் மூலம் இனவிருத்தி செய்யப்படுகின்றன. ஒட்டு கட்டிய செடிகள் தான் நடவுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

விதைத்தல்

ஒட்டுப்பகுதி மேலே தெரியும்படி குழிகளின் மையப்பகுதியில் செடிகளை நடவு செய்ய வேண்டும். செடிகள் காற்றினால் சாயாதவாறு இருபுறமும் குச்சிகள் நட்டு செடியுடன் சேர்த்து கட்டவேண்டும். முதல் ஆண்டில் ஒட்டுப்பகுதிக்கு கீழிருந்து வளரும் துளிர்களை அவ்வப்போது நீக்கிடவேண்டும்.

நீர் நிர்வாகம்

மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மண்ணின் தன்மைக்கேற்ப செடிகள் துளிர்த்து நன்கு வளரும் வரை நீர்ப்பாய்ச்சவேண்டும்.

உரங்கள்

மரம் ஒன்றிற்கு 25 கிலோ தொழு உரம், 500 கிராம் தழைச்சத்து, 1 கிலோ மணிச்சத்து, 1 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்கவேண்டும். இந்த உரங்களையே ஆண்டிற்கு இருமுறை அளிக்க வேண்டும்.

 

களை நிர்வாகம்

களைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும். முதல் ஆண்டில் ஒட்டுப்பகுதிக்கு கீழிருந்து வளரும் துளிர்களை அவ்வப்போது நீக்கிடவேண்டும்.

ஜீன் – ஜீலைகளில் மாதங்களில் அறுவடைக்கு வரும் வகைகளை நவம்பர் மாதத்திலும், ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் அறுவடைக்கு வரும் வகைகளை ஜனவரி மாதத்திலும் கவாத்து செய்யவேண்டும். உள்நோக்கி வளரும் குச்சிகளையும், காய்ந்த குச்சிகளையும் முதலில் வெட்டவேண்டும். பின்பு சென்ற பருவத்தில் வளர்ந்துள்ள குச்சிகளை, மூன்றில் ஒரு பகுதி அல்லது பாதியை வெட்டி குறைக்கவேண்டும்.

 
அசுவினி பூச்சி

அசுவினிப் பூச்சியை கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 இசி 4 மில்லி மருந்தை, 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

படர் பாசிகள்

படர் பாசிகளைக் கட்டுப்படுத்த 1 கிலோ சுண்ணாம்பை, 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து கவாத்து செய்தவுடன் தெளிக்க வேண்டும்.

சொறிநோய்

சொறிநோய் ஏற்படுவதை கட்டுப்படுத்த கேப்டான் அல்லது மேன்கோசெப் 2 கிராம் மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மொட்டுக்கள் வரும்போது அல்லது மொட்டு வந்த 15 நாட்களிலும், இதழ்கள் உதிர்ந்து 10 நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும்.

இதழ்கள் உதிரும் போது கார்பன்டாசிம் 0.5 கிராம் மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். பழங்கள் உருவாகி 14 நாட்கள் கழித்து கேப்டாபால் 2 கிராம் மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

அறுவடை

செடிகள் நட்ட 4ம் ஆண்டிலிருந்து காய்க்கத் துவங்கிவிடும். நன்கு திரண்ட பழங்களை முற்றும் முன் அறுவடை செய்ய வேண்டும்.

மகசூல்

ஆண்டிற்கு, மரம் ஒன்றிலிருந்து 10 முதல் 20 கிலோ பழங்கள் வரை கிடைக்கும்.




தற்போதைய செய்திகள்