வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதியும் இருப்பதாக கூறுவார்கள், இறைவனுக்கு எதனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்று பெறுவதில்லை என்பார்கள். இவ்வாறு நம் வாழ்வில் வெற்றிலை முக்கிய இடத்தை அடைந்துள்ளது.
பயிரிடும் முறை:
தை – பங்குனி, ஆனி – ஆவணி மாதங்களில் அகத்தியை விதைக்க வேண்டும். வெற்றிலை கோடியை பங்குனி – சித்திரை, ஆவணி – புரட்டாசி மாதங்களில் நடவு செய்ய வேண்டும்.
நல்ல வடிகால் வசதி கொண்ட கரிசல் மண் சாகுபடிக்கு சிறந்தது.
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் பண்படுத்த வேண்டும். பின் ஒரு மீட்டர் அகலம் கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். நீளம் வயலின் அமைப்புக்கேற்ப அமைக்க வேண்டும். பாதைகளின் உயரம் 0.5 மீட்டர் இருக்க வேண்டும்.
இடைவெளியை பொறுத்து பயிர்களின் எண்ணிக்கை மாறுபடும். தாய் கொடியின் நுனியிலிருந்து முதல் மூன்று அடி வரை நறுக்கி, அதனை மூன்று துண்டுகளாக்கி நடவு செய்ய வேண்டும். விதைக்கொடிகளில் 4 – 5 கணுக்கள் இருக்க வேண்டும்.
விதை கொடிகளை நடுவதற்கு முன் 6 பொட்டலம் அசோஸ்பைரில்லம் கொண்ட சானக்குழம்பில் அடிப்பகுதிகளை ஊறவைத்து நடவு செய்ய வேண்டும். இதன் மூலம் வேர்கள் துரிதமாக வளர்ச்சி அடையும்.
மேட்டுப்பாத்திகளில் இரட்டை வரிசைகளாக அகத்தி விதைகளை 30 செ.மீ இடைவெளிகளில் விதைக்க வேண்டும். அகத்தி நடவு செய்த பின் 60 நாட்கள் களைத்து வெற்றிலைக் கொடிகளை 45 செ.மீ இடைவெளியில் இரண்டு வரிசைகளில் நடவு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் ஓரங்களில் வாழை கட்டைகளை நடவு செய்யலாம்.
கொடிகளை நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின் மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
கொடிகளை நட்ட 50 வது நாள் தொழு உரம் 5 டன் இட வேண்டும். ஒரு எக்டருக்கு 150 கிலோ தழைச்சத்து, ௧௦௦ கிலோ மணிச்சத்து, 50 கிலோ சாம்பல் சத்து உரங்களை இட வேண்டும். தழைச்சத்து உரங்களை நான்கு பங்குகளாக பிரித்து 45 நாட்கள் இடைவெளியில் அளிக்க வேண்டும்.
செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். அகத்தி செடிகளை 2 மீட்டர் உயரம் வரை ஒரு தண்டாக வளர்த்து பின் நுனிகளை கிள்ளி விட வேண்டும்.
வெற்றிலை கொடிகள் ஒரு வருடத்தில் 3 மீட்டர் வரை வளரும். கொடிகள் குறுக்கு விட்டங்கள் உயரம் வந்தவுடன், கீழ் இறக்கி மடித்துக் கட்டுவதன் மூலம் தூர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
கொடிகள் நட்ட 120 நாட்களில் பறிக்க ஆரம்பிக்கலாம். சுழற்சி முறையில் அறுவடை செய்யலாம் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் அணைத்து இலைகளையும் அறுவடை செய்யலாம்.
ஒரு வருடத்தில் ஒரு எக்டாரில் இருந்து 75 – 100 லட்சம் இலைகள் வரை கிடைக்கும்.
