ஊரடங்கு தடை காரணமாக, மிளகு தேக்கமடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட விலை சரிவால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டி, தேனி போடி, கம்பம் மற்றும் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதிகளில், மிளகு சாகுபடி அதிகளவில் நடக்கிறது.
இந்த பகுதிகளில் விளையும் குறுமிளகு அளவில் சிறியதாக இருந்தாலும், காரத்தில் தனித்தன்மை கொண்டது. எனவே, இவை அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், கரோனாவை தடுக்க கடந்த மார்ச், 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், போக்குவரத்து நிலைமை சீரடையவில்லை. இதனால், சாகுபடி செய்யப்பட்ட மிளகு அதிகளவில் தேங்கி, விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: மிளகு கொடியை ஒருமுறை நடவு செய்தால், நான்கு ஆண்டுகளுக்கு பிறகுதான் முழு அளவில் மகசூல் கொடுக்கும். இக்கால கட்டத்தில் ஏற்படும் இயற்கை சீற்றங்களில், மிளகு கொடிகளை பாதுகாப்பது பெரும் சவாலாக உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, மிளகுக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் தடுமாறி வந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டரை மாதங்களாக, நாடு முழுவதும் கரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ளது. வெளிநாடுகளுக்கும் மிளகை அனுப்ப முடியவில்லை.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட, பிற மாவட்டங்களுக்கும், மிளகை முழுமையாக அனுப்ப போதிய போக்குவரத்து வசதி இல்லை. இதனால், டன் கணக்கில் விவசாயிகளிடம் மிளகு தேங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.650 வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது, ரூ.350 முதல் 500 வரை தான் விற்பனையாகிறது. இதனால், மிளகுக்கு விலையை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.
