width:640px height:480px செய்திகள்

நிலக்கடலையில் கூடுதல் மகசூலுக்கான வழிமுறைகள் வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை




புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பரவலாக பெய்து வரும் மழையினை பயன்படுத்தி ஆனி மற்றும் ஆடிப்பட்ட நிலக்கடலை விதைப்புக்குத் தயாராகி வருகின்ற விவசாயிகள், மானாவாரி நிலக்கடலை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற கடைபிடிக்க வேண்டிய முக்கிய தொழில் நுட்பங்களை பத்து வழிமுறைகளாக புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர்(பொ), மெ. சக்திவேல் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

வழிமுறை 1. கோடை உழவு மேற்கொள்வதால் களைகள் கட்டுப்படுத்தப்படுவதோடு மண்ணில் நீர் சேமிக்கும் திறன் அதிகமாகி பயிர் வறட்சியை தாங்கி வளரும்.

வழிமுறை 2. ஏக்கருக்கு ஐந்து மெட்ரிக் டன் தொழு உரம் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு இட்டு உழவு செய்யவேண்டும்.

வழிமுறை 3. மானாவாரி நிலக்கடலையில் வறட்சியை தாங்க விதைகளைக் கடினப்படுத்தி விதைப்பு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 55 கிலோ விதை பருப்புகளை 125 மில்லிகிராம் கால்சியம் குளோரைடு + 25 லிட்டர் தண்ணீரில் கலந்து ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு நீரை வடிகட்டி விதைகளை ஈரமான சாக்கின் மேல் பரப்பி அதன்மேல் மற்றொரு ஈரமான சாக்கினைக் கொண்டு மூடவும். பின் 24 மணி நேரம் கழித்து முளைவிட்ட விதைகளை தனியே பிரித்தெடுத்து நிழலில் உலரவைக்கவும். பின் 2-3 முறை இரண்டு மணிநேர இடைவெளியில் மேற்கண்டவாறு செய்து நன்கு முளைகட்டிய விதைகளை பிரித்தெடுத்து பின்பு விதைக்கவும்.

வழிமுறை 4. ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைகோடெர்மா விரிடி மருந்தினை கலந்து விதை நேர்த்தி செய்து விதைத்தால் விதை மூலம் பரவும் நோய்களான வேர் அழுகல் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

வழிமுறை 5. ஏக்கருக்கு 55 கிலோ விதை கடலை பருப்புகளை பயன்படுத்தி செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளியும், வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளியும் இருக்குமாறு விதைக்கவும். அதாவது பயிர் எண்ணிக்கை ஒரு சைக்கிள் டயருக்கு 11 செடிகள் இருக்குமாறு விதைப்பு செய்ய வேண்டும்.

வழிமுறை 6. உயிர் உரங்கள் ரைசோபியம் (நிலக்கடலை) மற்றும் பாஸ்போபாக்டீரியா ஏக்கருக்கு தலா நான்கு பாக்கெட் (800 கிராம்) 10 கிலோ தொழுஉரம் மற்றும் 10 கிலோ மணலுடன் கலந்து வயலில் இடவும்.

வழிமுறை 7. ஜிப்சம் ஏக்கருக்கு 80 கிலோ அடியுரமாகவும், 80 கிலோ ஜிப்சத்தினை 40-50வது நாளில் மண் ஈரத்திற்கேற்ப இரண்டாவது களை எடுக்கும் சமயத்தில் இட்டு மண் அணைக்கவும். இதனால் விழுதுகள் நன்கு இறங்கி அதிகக் காய்கள் பிடிப்பதுடன் பொக்கற்ற திரட்சியான நிலக்கடலை கிடைக்கும்.

வழிமுறை 8. மானாவாரி நிலக்கடலையில் ஊடுபயிராக துவரை, உளுந்து, தட்டைபயறு, ஆமணக்கு போன்ற பயிர்கள் சாகுபடி செய்ய வேண்டும். இதனால் பூச்சி, நோய்கள் கட்டுப்படுத்தப்படுவதோடு கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

வழிமுறை 9. மானாவாரி நிலக்கடலையில் வறட்சியை தாங்கவும், அதிககாய்கள் பிடிக்கவும், ஒரு சத பொட்டாஷ் கரைசலை தெளிப்பு செய்யவேண்டும்.

வழிமுறை 10. பூச்சி நோய்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

எனவே, மானாவாரியில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சத்தான காய்களை கொத்து கொத்தாக பெற்று கூடுதல் மகசூலும், லாபமும் அடைந்திட முக்கிய சாகுபடி தொழில்நுட்பங்களை கடைப்பிடித்திட வேண்டுமெனவும், மேலும் கூடுதல் விபரங்களுக்கு தங்கள் அருகாமையில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகிடுமாறும் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர்(பொ), மெ. சக்திவேல் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

 ஒம்ஃ- மெ.சக்திவேல்,

வேளாண்மை இணை இயக்குநர்(பொ.),
புதுக்கோட்டை




தற்போதைய செய்திகள்