திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஆயக்கட்டு பகுதியில் நெல், கரும்பு, மக்காச்சோளம், உள்ளிட்ட பலவகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. எந்த வகை பயிர் சாகுபடி செய்தாலும் மண்ணின் வளத்தை பொறுத்து தான் மகசூல் கிடைக்கும்.
இது குறித்து விவசாயிகள் தெரிவித்ததாவது : ஒரு டன் மண்புழு உரத்துடன் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஆகிய உரங்களை ஒரு கிலோ வீதம் கலக்கி பயன்படுத்தலாம். உரங்கள் கலக்கிய பின் அதிலுள்ள நுண்ணுயிர்கள் இறக்காமல், தடுக்க ஈரப்பதம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த உரங்களை மண்ணில் இடுவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து மண்புழு பெருக்கம் அதிகமாகும். இதனால், பயிர்களுக்கு கூடுதல் சத்து கிடைக்கும்.
இந்த உரத்தில் மண்புழுவின் முட்டைகள் மற்றும் சிறிய மண்புழுக்கள் இருப்பதால் அதிகளவு மண்புழுக்கள் பெருகும். அதிக அளவில் உற்பத்தியாகும் மண்புழுக்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களின் வேர்களைத் தாக்கும் புழுக்கள், பூச்சிகளை உட்கொண்டு அவற்றை அழித்து மண்ணுக்கும், பயிர்களுக்கும் பலன் தருகிறது. இவ்வாறு, தெரிவித்தனர்.
