ஈரோடு மாவட்டத்தில், 5,000 ஏக்கருக்கு மேல் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். அறுவடையாகும் மஞ்சள், ஈரோடு, பெருந்துறை, கோபி சொசைட்டிகளில் ஏலத்தில் விற்பனையாகிறது. கரோனாவுக்கான ஊரடங்கால் ஏலம் நிறுத்தப்பட்டு, கடந்த ஏப்ரல் 23ல் மீண்டும் துவங்கியது. ஏப்ரல் இறுதியில் ஒரு குவிண்டால் மஞ்சள், ரூ.7,200 ஆக இருந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேநேரம், மஹராஷ்டிராவில் மஞ்சள் மார்க்கெட் திறக்கப்பட்டு, தினமும், 30,000 மூட்டைக்கு மேல் மஞ்சள் வரத்தானது. இதனால், ஈரோட்டில் கொள்முதல் குறைந்து, குவிண்டாலுக்கு, ரூ.1,000 வரை, விலை சரிந்து, ரூ.6,200 ஆக குறைந்தது. தற்போது பங்களாதேஷ் உட்பட சில நாடுகளுக்கு அதிகளவில் மஞ்சள் ஏற்றுமதி நடைபெற்றும், விலை உயரவில்லை.
இதுபற்றி, ஈரோடு மஞ்சள் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது: இந்தியாவில் இருந்து பங்களாதேஷ் உட்பட சில நாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதியாகிறது. மஞ்சளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், மஞ்சள் வரத்தும் உயர்ந்துள்ளது. ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு கடந்த மாதம், 1,500 மூட்டை வரத்தானது. தற்போது தினமும், 3,000 மூட்டைகள் வரை, வரத்தாகிறது.
அத்துடன் வடமாநிலங்களில் மஹராஷ்டிராவில் மட்டும் தினமும், 30,000 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு வரத்தான நிலை மாறி, தற்போது, 65,000 மூட்டை வரை வரத்தாகிறது. இதனால், மஞ்சள் விலை சரிந்து காணப்படுகிறது. மேலும், நாம்தேட், பஸ்மத், இங்கூர் உள்ளிட்ட வடமாநில மார்க்கெட்களிலும், வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்னும் சில நாட்களுக்கு மஞ்சள் வரத்தும், தேவையும் அதிகரித்தாலும் விலை உயராது என விவசாயிகள் கூறினர்.
