width:640px height:480px செய்திகள்

நிலக்கடலை பயிரில் புரடினியா புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த புதுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஆலோசனை




புதுக்கோட்டை வட்டாரத்தில் நிலக்கடலை முக்கிய வேளாண் பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. நிலக்கடலை பயிரில் புரடினியா புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கணைந்த பயிர் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து புதுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது : நிலக்கடலை பயிரிடும் விவசாயிகள் புரடினியா புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். புரடினியா புழுக்கள் இலைகளை அதிகமாக உண்பதனால் இலைகள் கால்நடைகள் மேய்ந்தது போல் காணப்படும். புரடினியா புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த ஆமணக்கு அல்லது சூரியகாந்தி பயிரினை வரப்பு பயிராகவோ அல்லது ஊடுபயிராகவோ பயிரிட வேண்டும். விளக்குப் பொறிகளை வயலில் அமைப்பதன் மூலம் புரடினியா புழுவின் தாய் அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தினை கண்காணிக்க முடியும். ஒரு எக்டருக்கு 5 எண்கள் இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து புரடினியா புழுவின் தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழித்து தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்தலாம்.

பயிர்களில் காணப்படும் முட்டைக் குவியல்களை கண்டறிந்து அழிப்பதன் மூலம் பெருமளவு புரடினியா புழுவின் தாக்குதலை வயல்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். ஆமணக்கு அல்லது சூரியகாந்தியினை வரப்பு பயராக பயிடும் போது முதலில் புரடினியா புழுக்கள் ஆமணக்கு அல்லது சூரியகாந்தி பயிரினை தாக்கும், இந்த புழுக்களை சேகரித்து அழிப்பதனால் நிலக்கடலை பயிரினை புரடினியா புழுவிடமிருந்து காக்கலாம். வயல்களில் முட்டை குவியல்கள் மற்றும் இளம் புழுக்கள் தென்பட்டால் 5 சத வேப்பங்கொட்டை சாறினை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
புரடினியா புழுவினை கட்டுப்படுத்த நச்சு உருண்டைகள் தயார் செய்து வயல்களில் வைப்பதனால் பெருமளவு கட்டுப்படுத்த முடியும். நச்சு உருண்டைகள் தயார் செய்ய அரிசி தவிடு 5 கிலோ, வெல்லம் 1 கிலோ மற்றும் தயோடிகார்ப் 75 சத டபிள்யு.பி என்ற பூச்சிக் கொல்லி 500 கிராம் ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலவை தயார் செய்ய வேண்டும். இதனை சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி வயல்களில் ஆங்காங்கே வைத்து புரடினியா புழுவினை கட்டுப்படுத்தலாம்.

புரடினியா புழுவின் தாக்குதல் பொருளாதார சேத நிலையினை அடையும் போது குயினால்பாஸ் 25 இ.சி என்ற பூச்சிக் கொல்லியினை எக்டருக்கு 750 மிலி அல்லது குளோரிபைரிபாஸ் 20 இ.சி என்ற பூச்சிக் கொல்லியினை எக்டருக்கு 1000 மிலி என்ற அளவிலும் அல்லது எமாமெக்டின் பென்சோயேட் 5 சத எஸ்.ஐp எக்டருக்கு 250 கிராம் என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து புரடினியா புழுவின் தாக்குதலிருந்து நிலக்கடலை பயிரை பாதுகாத்து அதிக மகசூல் பெற்று பயன் பெறலாம் என புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி ஆலோசனை வழங்கியுள்ளார்.




தற்போதைய செய்திகள்