சங்கராபுரம் வட்டத்தில் உள்ள விவசாயிகள் சொட்டு நீர் பாசன திட்டத்தில் சேர்ந்து பயனடையுறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் 1800 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் கிணற்று பாசனத்தையே நம்பி, கிணறுகளில் இருக்கும் நீரை சிக்கனப்படுத்தி, அதிக பரப்பளவில் சாகுபடி செய்து லாபம் பெற ஆண்டு தோறும் தோட்டக்கலைத் துறை சார்பில் சொட்டு நீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் சொட்டு நீர் பாசன திட்டத்தில் சேர்ந்து பயனடைய வேண்டும்.
ஏற்கனவே சொட்டு நீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் ஆகியிருக்கும் விவசாயிகள் அரசு மானியத்தில் புதிதாக சொட்டு நீர் பாசனம் அமைத்துக் கொள்ளலாம். சங்கராபுரம் வட்டத்தில் நடப்பாண்டு 790 ஹெக்டேருக்கு சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் அமைக்க அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25,000, டீசல் இன்ஜின் மற்றும் மின் மோட்டார் வாங்க ரூ.15,000, பி.வி.சி., குழாய் பதிக்க ரூ.10,000. நீர் தேக்கத் தொட்டி அமைக்க ரூ.40,000 வழங்கப்படும்.
திட்டத்தில் சேர விவசாயிகள் தங்கள் நிலத்தின் கணினி சிட்டா, அடங்கல், ஆதார், ரேஷன் கார்டு நகல், பிரதம மந்திரியின் கிசான் உதவி பாங்க் புக், 2 புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் சங்கராபுரம் தோட்டக் கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
