width:275px height:183px கால்நடை

செம்மறியாடுகளைத் தாக்கும் நீலநாக்கு நோய்




செம்மறியாடுகளைத் தாக்கும் மிக முக்கியமான மற்றும் மிகுந்த பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் நச்சுயுரி நோய்களில் நீலநாக்கு நோயும் ஒன்றாகும். இந்நோயின் தாக்கம் பசு, எருமை மற்றும் வெள்ளாடுகளில் காணப்பாட்டலும் நோய் அறிகுறிகள் வெளிப்படையாகத் தென்படுவதில்லை. இந்நோய் கிருமியானது ரியோ விரிடே குடும்பத்தைச் சார்ந்த ஆர்பி வைரஸ் என்னும் நச்சுயிரியால் ஏற்படுகிறது. மேலும் உலகளவில் 27 வகையும், இந்தியாவில் 24 வகையும் தமிழ்நாட்டில் 6 வகையும் (1, 2, 9 , 10, 16, மற்றும் 23) கண்டறியப்பட்டுள்ளது.

நோய் பரவும் விதம்

நீலநாக்கு நோய் கூலிகாய்டஸ் எனும் ஒருவகை கொசுவினால் அதிகமாகப் பரவுகிறது. மேலும் சில சமயங்களில் ஒட்டுண்ணிகள், ஈக்கள், நோய் பாதித்த ஆடுகளில் விந்தணுக்கள் மற்றும் தொப்புள் கொடி மூலமாக கருவிற்கும் பரவுகிறது என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

♣ பெரும்பாலும் இந்நோயின் தாக்கமானது வடகிழக்கு பருவ மழைக்காலங்களிலும் குறிப்பாக அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி மாதம் வரையிலும் காணப்படும்.

♣ மழைக் காலங்களில் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக உள்ளதால் நோய் அதிமாக பரவுகிறது.

நோயின் அறிகுறிகள்

♣ அதிக காய்ச்சல் மற்றும் தீவனம் உண்ணாமல் சோர்ந்து காணப்படும்.
♣ மூக்கில் சளி மற்றும் வாய், உதடுகள், ஈறுகள் மற்றும் நாக்கு ஆகிய இடங்களில் சிறிய புண்கள் காணப்படுவதால் உமிழ் சுரப்பு அதிமாகவும் காணப்படும்.
♣ இந்நோய் கழுத்து தசைகளை பாதிப்பதால் கழுத்து ஒரு பக்கமாக சாய்ந்து காணப்படும்
♣ கால் குளம்பும், தோலும் இணையும் இடத்தில் வீக்கம் மற்றும் வெடிப்பு புண்கள் ஏற்பட்டு ஆடுகள் நொண்டி நடக்கும். மேலும் கால் குளம்புகளுக்கிடையே புண்கள் தோன்றும்.
♣ ஆட்டின் முகம் சிவந்தும், அதிக இரத்த ஓட்டத்தின் காணரமாக நாக்கு சிவப்பு நிறமாக காணப்படும். சில சமயம் நாக்கு நீல நிறமாக காணப்படும்.
♣ சில செம்மறியாடுகளில் வயிற்றுப்போக்கு, நுரையீரல் பாதிப்பு மற்றும் கருச்சிதைவு ஏற்படும். முடி கொத்துத் கொத்தாக கொட்டும்

சரியாக பராமரிக்கப்படாத ஆடுகளில் இறப்பு ஏற்படும். நீலநாக்கு நோயின் பாதிப்பானது சுற்றுப்புற சூழ்நிலை, மழை ஈரப்பதம் மற்றும் நோய்க்கு காரணமான கூலிகாய்டஸ் கொசுக்களின் உற்பத்தியைப் பொருத்து மாறுபடும்.

சிகிச்சை முறைகள்

♣ நோய் கண்ட ஆடுகளுக்கு தனி கவனம் செலுத்தி கம்பு/அரிசி/கேழ்வரகு கஞ்சி போன்று நீர் ஆகாரமாக கொடுக்கப்பட வேண்டும். நோய் கண்ட ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது.
♣ நோய் கண்ட ஆடுகளின் வாய்ப்புண்களை உப்புத் தண்ணீர் அல்லது பொட்டாசியம் பெர்மாங்கனேட்(1 கிராம்/2 லிட்டர் தண்ணீர்) கலந்த தண்ணீரால் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கழுவ வேண்டும். அதன் பிறகு வாயிலுள்ள புண்களை கிளிசரினுடன் போரிக் அமிலம் பவுடரை கலந்து தடவ வேண்டும்.
♣ ஆடுகளை டெல்டாமெத்ரின் (2 மி.லி/2 லி தண்ணீர்) மருந்து கலந்த நீரில் மூழ்கி எடுக்க வேண்டும். நோய் பாதித்த ஆடுகளுக்கு கால்நடை மருத்துவரைக் கொண்டு சிறப்புச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
♣ நோய் கண்ட ஆடுகளுக்கு மரபுசார் மூலிகை மருத்துவமும் செய்யலாம்.

மரபுசார் மருத்துவ முறை

♣ வாய்ப்புண் மருந்து

சீரகம் – 10 கிராம், வெந்தயம் 10 கிராம் மற்றும் மிளகு -10 கிராம் ஆகியவற்றை இடித்து பொடியாக்கி மஞ்சள் தூள் – 10 கிராம், பூண்டு 4 பல், வெல்லம் 100 கிராம், தேங்காய் துருவல் (ஒரு முழுத் தேங்காய்) சேர்த்து கலவையாக்கி உட்செலுத்த வேண்டும். நாள் ஒன்றுக்கு மூன்று முறை வீதம் 5 நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.

♣ கால்ப்புண் மேற்பூச்சு மருந்து

பூண்டு – 10 பல் மஞ்சள் தூள் – 10 கிராம், துளசி இலை – 10 இலை, குப்பைமேனி – 10 இலை, மருதாணி – 10 இலை மற்றும் வேபில்லை – 10 இலை நன்றாக அரைத்து நல்லெண்ணெய் விட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் கால் புண்கள் உள்ள இடத்தில் புண்கள் ஆறும் வரை உபயோகிக்கலாம்.

நோய் தடுப்பு முறைகள்

♣ நீலநாக்கு நோய்க்கு பல்தொகுதி வீரியம் நீக்கப்பட்ட தடுப்பூசி (1, 2, 10, மற்றும் 23 நச்சுயுரி வகை) பயன்படுத்தப்படுகிறது. 2 மி.லி தோலின் அடியில் கொடுக்கப்பட வேண்டும்.
♣ மூன்று மாதங்களுக்கு மேலான செம்மறியாடுகளுக்கு தடுப்பூச்சி அளிக்கப்பட வேண்டும். சினை ஆடுகளுக்கு எல்லா நிலையிலும் தடுப்பூசி போடலாம்.
♣ தமிழ்நாட்டில் இந்நோயானது வடகிழக்கு பருவமழை காலங்களின் போது தொடங்குவதால் ஜூலை மாதம் முதல் தடுப்பூசியும் பின்பு 28 நாட்கள் கழித்து ஊக்குவிப்பு தடுப்பூசியும் கண்டிப்பாக போட வேண்டும். மேலும் இத்தடுப்பூசி வருடம் ஒருமுறை வழங்கப்பட வேண்டும்.
♣ மழைக் காலங்களில் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக உள்ளதால் நோய் அதிமாக பரவுகிறது.

கூலிகாய்டஸ் கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

♣ மழைக்காலங்களில் கூலிகாய்டஸ் கொசுவின் இனப்பெருக்கத்தை தடுக்க டெல்டாமெத்ரின் பூச்சிக் கொல்லி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் 5 மி.லி விதம் கலந்து ஆட்டு கொட்டகையில் தரை உட்புற மற்றும் வெளிப்புற சுவர்கள், மூலை முடுக்குகள், எருக்குழி, புதர்கள் மற்றும் தண்ணீர் உள்ள பகுதிகளில் தெளிக்க வேண்டும்
♣ கூலிகாய்டஸ் மாலை மற்றும் அதிகாலை நேரத்திலும் அதிகமாக வந்து ஆடுகளை கடிப்பதால் இந்நேரங்களில் ஆடுகளை வெளியே விடாமல் ஆட்டுக் கொட்டகைக்குள் 6 மணி முதல் 8 மணி வரை வேப்பிலை, வேப்பம்பிண்ணாக்கு புகை மூட்டம் போட வேண்டும்
♣ ஆட்டு கொட்டில் சுற்றிலும் தண்ணீர் தேங்க விடக்கூடாது மற்றும் புதர்களை முற்றிலும் அகற்ற வேண்டும்.

மேற்கூறிய சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகளைப் பின்பற்றி செம்மறியாடு வளர்ப்போர் கையாண்டால் மிகுந்த பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் நீலநாக்கு நோயிலிருந்து ஆடுகளை காத்து அதிக லாபம் ஈட்டலாம்.




தற்போதைய செய்திகள்