width:px height:px கால்நடை

ஆடுகளைத் தாக்கும் துள்ளுமாரி நோய்




செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளைத் தாக்கும் மிக முக்கியமான, அதிக பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கொடிய நோய்களில் துள்ளுமாரி நோயும் ஒன்றாகும். எல்லா வயதுடைய ஆடுகள் பாதிக்கப்பட்டாலும் குறிப்பாக 3 முதல் 10 நாட்கள் வயதுடைய குட்டிகள் மற்றும் நல்ல செழிப்பான ஆடுகள் அதிக பாதிப்புக்குள்ளாகும்.

இந்நோய் கிளாஸ்டிரிடியம் ஃ பர்பிரிஜென்ஸ் சி மற்றும் டி வகையுடைய நுண்ணுயிரிகள் ஒருவித நச்சுப் பொருட்களை சுரப்பதினால் ஏற்படுகிறது. மண் மற்றும் புதிதாக முளைத்த புல்களில் இக்கிருமிகள் காணப்படும் மேலும் ஆடுகளின் குடற் பாதையில் சாதாரணமாக குறைந்த எண்ணிக்கையில் காணப்படுவதால் குறைந்த அளவே நச்சுப் பொருட்களை சுரக்கும்.

ஆதலால் நல்ல நிலையில் உள்ள ஆடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் இந்நோய்க் கிருமிகள் பல்வேறு காரணங்களால் அதிகரிக்கும் பொழுது, அதிக அளவு நச்சுப் பொருட்களை சுரப்பதினால் பாதிக்கப்பட்ட ஆடுகள் இறக்க நேரிடும்.

நோய் உண்டாகும் விதம்

மழைக் காலங்களில்; புதிதாக முளைத்த புள்களை செழிப்பாக உள்ள

ஆடுகள் அதிக அளவில் உண்ணும் பொழுது இந்நோய் கிருமிகள் எண்ணிக்கை குடற் பாதையில் அதிகரிக்கும்.


இளவயது குட்டிகள் அதிக அளவு பால் குடிப்பதனால் செரிமானமின்மை ஏற்பட்டு நோய்கிருமிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.


மாவுச்சத்து, தானிய வகை மற்றும் அடர் தீவனத்தை அதிக அளவு கொடுக்கப்பட்டால் குடற்பாதை மந்தநிலை ஏற்பட்டு கிருமிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.


குடற்புழுக்கள் மற்றும் அதிக கழிச்சலினால் குடற் பாதை பாதிக்கப்பட்டு நோய் கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.


திடீர் தீவன மாற்றம் இந்நோய்கிருமிகள் வளர ஏதுவான சூழலை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அதிகரித்த நோய் கிருமிகளின் எண்ணிக்கையினால் அதிக நச்சுப் பொருட்களை சுரந்து குடற் அழற்சியை ஏற்படுத்தி இரத்தத்தில் கலந்து நுரையீரல், மூளை மற்றும் சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளில் பாதிப்பை உண்டாக்குகிறது.

நோயின் அறிகுறிகள்

மிகுந்த பாதிப்புக்குள்ளான ஆடுகளில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் வலிப்பு ஏற்பட்டு துள்ளி எவ்வித அறிகுறிகளுமின்றி இறக்கநேரிடும்.


இந்நோய் பாதிப்புக்குள்ளான இழம் குட்டிகள் கை கால் மற்றும் தலை மிகுந்த சோர்வுற்று எவ்வித அசைவுமின்றி காணப்படும். இவ்வாறு காணப்படும் குட்டிகள் சில மணி நேரத்தில் இறந்துவிடும்.


மிதமான பாதிப்புக்குள்ளான ஆடுகளில் பசியின்மை, சோர்வு, வயிறு உப்பசம், வயிற்று வலி மற்றும் நீர் போன்ற வயிற்றுப்போக்கு காணப்படும். மேலும் சில சமயம் சாணத்தில் இரத்தம் காணப்படும். அதிக பாதிப்புக்குள்ளான ஆடுகள் தள்ளாடி நடத்தல் அதன் பிறகு ஒரு புறமாக தலையை சாய்த்து வைத்துக் கொண்டு நான்கு கால்களை நீட்டி படுத்துக்கொள்ளும்.

நோயினைக் கண்டறியும் முறை

மழைக்காலங்களில் எவ்வித அறிகுறிகளுமின்றி ஆடுகள் இறக்க நேரிட்டால் பிரேத பரிசோதனை செய்து இந்நோயினைக் கண்டறியலாம்.


குடற் பகுதியில் உட்புற சவ்வில் இரத்தம, வயிற்றப் பகுதியில் நீர்த்த இரத்தம், நுரையீரலில் நீர்க்கோர்வை மற்றும் இதயத்தின் வெளிப்புறத்தில் இரத்த புள்ளிகள் காணப்படும்.


குட்டிகளின் பிரேதப்பரிசோதனையின் போது சிறுநீரகம் சற்று வீக்கமாகவும், மிருதுத்தன்மையுடனும் காணப்படும். மேலும் பாதிக்கப்பட்ட ஆடுகளின் சிறுநீரில் அதிக அளவு சர்க்கரை அளவு காணப்படும்.


உடற்கூறு ஆய்வுக்குப்பின் குடற் பகுதிகள், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் நுரையீரல் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி இந்நோய்கிருமியினை உறுதி செய்து கொள்ளலாம்.

சிகிச்சை முறை

மிதமான பாதிப்புக்குள்ளான ஆடுகளுக்கு பெனுசிலின் எனும் நுண்ணுயிர் கொல்லியும், மெலாக்சிகம் எனும் வலி நிவாரனியும் மற்றும் பி காம்ளக்ஸ் எனும் மருந்துகளை ஊசியின் மூலம் தசை வழி செலுத்தி சிகிச்சை அளிக்கலாம். மேலும் வயிற்றுப் போக்கின் போது நீர்ச்சத்து குறையாமல் இருக்க ரிங்கர்ஸ் லேக்டேட் எனும் திரவத்தினை சிறை வழி ஏற்றலாம். 

வயிறு உப்பசம் மற்றும் அமில முறிவு பொருட்களை வாய் வழியாகக் கொடுக்கலாம்.

நோயின் தீவிர நிலையின் போது மேற்கூறிய சிகிச்சை முறைகள் பயனளிக்காது. ஆதலால் இந்நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்த மழைக்காலங்களுக்கு முன் தடுப்பூசி போடுதல் அவசியம் மற்றும் சில மேலாண்மை முறைகளை கடைபிடித்தலின் மூலம் இந்நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.தடுக்கும் முறைகள்

நோய் மேலாண்மை

மழைக்காலத்திற்கு முன்பாக முறையான குடல் புழு நீக்கம் செய்யப்பட வேண்டும். பட்டியில் உள்ள 4 மாதத்திற்கு மேலான ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். அதன் மூலம் குட்டிகளுக்கும் தாயிடமிருந்து நோய் எதிர்ப்புத் திறன் சீம்பால் மூலம் கிடைக்கும்.


ஆறு மாதத்திற்குப் பின்பு ஒரு ஊக்குவிப்பு தடுப்பூசி போடப்பட வேண்டும்.

மேலும் ஆண்டிற்கொரு முறை தடுப்பூசி தவறாமல் போடப்பட வேண்டும்.

ஆட்டுப் பண்ணையில் புதிதாக சேர்க்கப்படும் ஆடுகளுக்கு தடுப்பூசி போடுதல் அவசியம்.

தீவன மேலாண்மை

ஆடுகளுக்குத் தேவையான உணவு அளவினை ஒரே சமயத்தில் அளிக்காமல் அவற்றை பிரித்துக் கொடுத்தல் அவசியம்.

ஆடுகளுக்குத் தீவனம் அளிக்கும் போது நார் சத்து மிகுந்த தீவனத்தையும் பின்னர் அடர் தீவனத்தையும் அளிக்க வேண்டும்.

ஆடுகளை மேய்ச்சலுக்கு மூன்று மணி நேரம் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

தீவன முறையில் ஏதேனும் மாற்றம் செய்யும் போது ஒரே நாளில் மாற்றம் செய்யாமல் படிப்படியாக செய்யப்பட வேண்டும். ஆகவே நோய் மற்றும் தீவன மேலாண்மையை கையாளுவதன் மூலம் இந்நோயின் தாக்கத்தையும் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பினை தடுத்து ஆடு வளர்ப்பை இலாபகரமான தொழிலாக மாற்றலாம் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.




Site For Sale Contact : 9894832938