கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் காய்கறி பயிர் சாகுபடி அதிகம் உள்ளது. பூச்சி தாக்குதலால், விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதற்காக, விவசாயிகள் ரசாயன பூச்சி கொல்லிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இதனால், விளைபொருட்களில் ரசாயனம் படிவதுடன், உற்பத்தி செலவும் அதிகரிக்கிறது. இதற்கு தீர்வாக, கற்பூர கரைசலை பயன்படுத்தி தீர்வு பெறலாம் என்கின்றனர் இயற்கை விவசாயிகள்.
கற்பூர கரைசல் தயாரிக்க, 100 மில்லி வேம்பு எண்ணெய், மாட்டு கோமியம், பயிரின் வயதுக்கு ஏற்ப கற்பூர வில்லைகள், கத்தரி, வெண்டை போன்ற பெரிய பயிர் செடிகளுக்கு வெயில் காலங்களில் எட்டு வில்லைகள், வெயில் குறைவான காலங்களில், 10 வில்லைகள் வரை கொடுக்கலாம்.
கற்பூரம் தண்ணீரில் கரையாது, கரும்பு ஆலைகளில் இருந்து கழிவாக கிடைக்கும் எத்தனால் அல்லது நீலகிரி தைலத்தில் கற்பூரத்தை கரைக்கலாம். வேம்பு எண்ணெயுடன் ஷாம்பூ, காதி சோப் ஏதாவது ஒன்றை கலந்து, திட நிலைக்கு மாற்றிக் கொள்ளலாம். வேம்பு எண்ணெய் கலவை, கற்பூர கரைசல்,
ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், 1.5 ஸ்பூன் கிளிஞ்சல் சுண்ணாம்பு கலந்து கொண்டால், கற்பூர கரைசல் முழுமையாக தயாராகி விடும். இதை, தண்ணீரில் கலந்து, ஸ்பிரேயரில் தெளிக்கலாம்.
இதன் மூலம், பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்தலாம். இந்த கரைசலை பயிர்களுக்கு கொடுப்பதால் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மகசூலும் அதிமாக இருக்கும். மிளகாய்க்கு ஆரம்பத்திலிருந்து கொடுப்பதால் முடக்கு நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம். உளுந்து பயிரில், அதிகமான பூக்கள் பூக்கும்.
நிலக்கடலை பயிரில் பூச்சி தாக்குதல்கள் கட்டுப்படும். பருத்திக்கு ஆரம்பத்திலிருந்து கற்பூர கரைசல் கொடுத்தால் காய் துளைப்பான் நோயை முற்றிக்கும் தடுக்கலாம். மாவு பூச்சியை கற்பூர கரைசல் சில மணி நேரத்திற்குள் கட்டுப்படுத்திவிடும். இவ்வாறு, தெரிவித்தனர்.
