width:500px height:390px விவசாயம்

70% மானியத்தில் சூரியசக்தி பம்ப்செட்டுகள் எஸ்சி, எஸ்டி விவசாயிகளுக்கு அழைப்பு




70 சதவிகித மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்ப் செட்டுகள் அமைக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வேளாண்மை பொறியியல் துறை மூலம் திறந்த வெளி கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்புகள் தனிப்பட்ட விவசாயிகளுக்கு 70% அரசு மானியத்தில் செயல்படுத்துவதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை கொடுத்து 750 எண்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இத்திட்டம் 40% மாநில அரசு நிதி, 30% மத்திய அரசின் புதிய பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 5 எச்பி முதல் 10 எச்பி வரை மோட்டார் பம்ப் செட்டுகள் அமைத்துத் தரப்படும். ஏற்கனவே தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ள விவசாயிகள் அவர்களுடைய மூதூரிமையை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்களுக்குரிய இலவச மின் இணைப்பு முறை வரும்பொழுது சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சம்மத கடிதத்தினை சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

இதுவரை இலவச மின் இணைப்பு வேண்டி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விண்ணப்பிக்காத விவசாயிகள் புதிதாக பதிய வேண்டிய அவசியமில்லை. சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளை அமைத்திட விண்ணப்பிக்கும் போது நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்திட உறுதிமொழி அளித்திட வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விருதுநகர் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி வட்டார விவசாயிகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்திலும் (கைபேசி எண்: 9486520968), சாத்தூர், சிவகாசி வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம் மற்றும் வத்திறாயிருப்பு வட்டார விவசாயிகள்

கிருஷ்ணன் கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் எதிரிலுள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்திலும் (கைபேசி எண்: 9498024227) தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.




Site For Sale Contact : 9894832938