புதுச்சத்திரம் பகுதியில் மரவள்ளியில் செம்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் பால் ஜாஸ்மின் தெரிவித்ததாவது.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டாரத்தில், 660 ஹெக்டேர் பரப்பளவில், மரவள்ளி பயிர் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, இப்பயிரில், செம்பேன் தாக்குதல், ஆங்காங்கே காணப்படுகிறது. தாக்குதலுக்கு உட்பட்ட பயிர்களின் இலைகள், தீயில் கருகியது போல் காணப்படும்.
இந்த தாக்குதல் காணப்பட்டவுடன் அசாடிராக்டின் ஒரு லிட்டர் தண்ணீருக்கு, இரண்டு மில்லி அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு, ஒன்றரை மில்லி ஓமைட்டை நீரில் கலந்து, முதல் கட்டமாக தெளிக்க வேண்டும்.
அதையடுத்து, ஏழு நாட்கள் கழித்து, ஒரு லிட்டர் தண்ணீருக்கு, மூன்று கிராம் யூரியா கலந்து பேட்டரியில் இயக்கப்படும் கைத் தெளிப்பான் கொண்டு, இலைகள் முழுவதும், இரண்டு பக்கமும் நனையும் வகையில் தெளிப்பது அவசியம்.
செம்பேன் தாக்குதல் தீவிரமாக இருந்தால், பெனசோகுவின், 1.5 மி.லி.,ரை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மேற்கண்ட முறையில் தெளித்து, இந்த தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாத்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
