கால்நடை வளர்ப்பில் மொத்தச் செலவினத்தில் தீவனச் செலவு 55-60 விழுக்காடு ஆகும். எனவே,பொருளாதார ரீதியான பண்ணையத்திற்கு சிறப்பான முறையில் தீவனம் அளிப்பதே மிகவும் முக்கியமான அம்சம் ஆகும்.
கால்நடைகளுக்கு அனைத்து சத்துகளையும் கொண்ட சரிவிகித உணவை சரியான அளவில் வழங்க வேண்டும்.
பயறு வகைத் தீவனப்பயிர்களில் அதிக அளவில் புரதச்சத்து, வைட்டமின்கள், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளதால் இவை கால்நடைத் தீவனத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தானியம் மற்றும் புல்வகைத் தீவனப்பயிர்களுடன் பயறுவகைத் தீவனப்பயிர்களை மூன்றுக்கு ஒரு பங்கு கலந்து கொடுப்பதன் மூலம் தீவனத்தின் சுவை அதிகரிக்கிறது. கறவை மாடுகளின் பால் உற்பத்தித் திறன் கூடுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட தீவனத்தட்டைப்பயிறு கோ 9 அனைத்துப் பருவங்களிலும் பயிரிட ஏற்றது. இந்த தீவனத்தட்டைப்பயிறை செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் மானாவாரியில் பயிரிடலாம். இறவையில் பயிரிடும்போது ஜுன்-ஜுலை, பிப்ரவரி-மார்ச் மிகவும் ஏற்றது. இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதை போதுமானதாகும்.
ஐம்பது விழுக்காடு செடிகள் பூத்தவுடன் பசுந்தீவனத்தை 50-55 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். விதைக்கு என்றால் 90-95 நாட்களில் அறுவடை செய்யலாம்.
ஒரு எக்டருக்கு 900-1000 டன் வரை விதை மகசூல் கிடைக்கும். குறைந்த வயதுடையதால் சோளம், மக்காச்சோளத்துடன் கலப்புத் தீவனமாகப் பயிரிட ஏற்றது. இந்த தீவனத்தட்டைப்பயிறு குறைந்த அளவு நார்ச்சத்து கொண்டுள்ளதால் அதிக சுவை மற்றும் கால்நடைகளின் செரிமானத்திற்கும் ஏற்றதாக உள்ளது. இந்த இரகம் மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்ட இரகமாகும்.
இந்த இரகம் அதிக பசுந்தீவன மகசூல் ஒரு எக்டருக்கு 23 டன் வரை கொடுக்கக்கூடியதால் விவசாயிகள் தீவனத் தட்டைப்பயிறு கோ-9 இரகத்தைப் பயிரிட்டு பயன்பெறவேண்டும் என மதுரை, வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் (வேளாண் விரிவாக்கம்), முனைவர் கு. செல்வராணி, மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், முனைவர் செல்வி இரமேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.
