width:868px height:380px செய்திகள்

நிலக்கடலையில் திரட்சியான காய்கள் பெற ஜிப்சம் இடுவீர் வேளாண்மை அதிகாரி தகவல்




ஈரோடு மாவட்டத்தில் மானாவாரிப் பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி தற்போது செய்யப்பட்டு வருகிறது. நிலக்கடலைக்கு ஜிப்சம் உரம் இடுவதால் கூடுதல் மகசூல் கிடைப்பதாக வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளதாவது : நிலக்கடலை உற்பத்தியில் நம் நாடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இது தாவர எண்ணெய் உற்பத்தியில் முக்கிய இடம் பெறுவதோடு நல்ல தரம் வாய்ந்த புரதம் மற்றும் தேவையான அளவு சத்துக்கள் அடங்கிய உணவுப் பொருளாக பயன்படுகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நிலக்கடலைப் பயிரை சாகுபடி செய்யும் போது அதன் மகசூலை அதிகரிப்பதற்கு ஜிப்சம் உரம் மிகவும் பயன்படுகிறது.

‘ஜிப்சம்” உரத்தின் இரசாயனப் பெயர் “கால்சியம் சல்பேட்” எனப்படுகிறது. இதில் கால்சியம் (சுண்ணாம்பு) சத்து 23 சதவீதம் வரையிலும், கந்தகச்சத்து (சல்பர்) 18 சதவீதம் வரையிலும் உள்ளது. நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் மற்றும் புரத பயிர்கள் அனைத்திற்கும் ஜிப்சம் அவசியம் இடவேண்டும்.

ஏனெனில் இந்த பயிர்களுக்கு மிகவும் அவசியமான கந்தகசத்து ஜிப்சத்தில் தான் அதிக அளவிலும், குறைந்த விலையிலும் கிடைக்கிறது. தமிழகத்தில் அனைத்துப் பகுதி மண் வகைகளிலும் கந்தகச்சத்து குறைபாடு காணப்படுகிறது.

கந்தகச்சத்து குறைபாடு காரணமாக விளைச்சல் குறைவதுடன் எண்ணையின் அளவும் குறைகிறது. பயிர் வளர்ச்சி குன்றி வேர் முடிச்சுகள் பாதிப்படைவதால் தழைச்சத்தை நிலை நிறுத்துவதும் பாதிக்கப்படுகிறது. எனவே, ஜிப்சம் இடுவதால் இந்தக் குறைபாடுகள் நீக்கப்படுகின்றன. மேலும், ஜிப்சம் இடுவதால் மண் இறுக்கம் குறைந்து, நிலக்கடலைக் காய்களின் பருமன் ஒரே சீராகவும், திரட்சியாகவும் ஆகிறது. நிலக்கடலை பருப்பு விதைக்கும் போது ஏக்கருக்கு 80 கிலோவும், விதைத்த 45வது நாளில் களை வெட்டி மண் அணைக்கும் போது ஏக்கருக்கு 80 கிலோவும் ஆக இரண்டு முறை மொத்தம் 160 கிலோ ஜிப்சம் இடவேண்டும்.

நிலக்கடலை மட்டுமல்லாது களர் மண் நிலங்களின் பயிர் மகசூலைக் கூட்டவும், ஜிப்சம் அற்புதமாகச் செயல்படுகிறது. மண் இறுக்கமான நிலங்களில் ஜிப்சம் களிமண்ணை கூட பொல பொலப்பாக்கி வேர் வளர்ச்சிக்கு துணை புரிகிறது.

மண்ணின் காற்று, நீர்ப்பிடிப்பு தன்மையை அதிகமாக்குகிறது. எனவே நெல், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர் சாகுபடியின் போதும் ஜிப்சம் இட்டு நிலத்தை மேம்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.




தற்போதைய செய்திகள்