ஊட்டச்சத்து அதிகமுள்ள சிறு தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க, வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் விவசாயத்தில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
குறிப்பாக, நெல், பயறுவகை, சிறு தானியங்கள், பருத்தி, கரும்பு மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் என 96,632 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு அரிசி உணவுடன், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களான, கம்பு, ராகி, சோளம், வரகு, தினை, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட சிறு தானியங்கள் தினமும் உணவில் பயன்படுத்துவது அவசியமாகும்.
இந்நிலையில், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியப் பயிர்களின் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க, வேளாண்மைத்துறை மூலம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
அதன்படி, சோள பயிர், முன்னோடி தொகுப்பு செயல் விளக்கத்திடல், அமைக்க ஒரு ஹெக்டேருக்கு, ரூ.6,000 வீதம், 170 ஹெக்டேருக்கு வழங்கப்படுகிறது.
கம்பு பயிருக்கு, மடத்துக்குளம், உடுமலை வட்டாரத்தில், தலா 25 ஹெக்டேர், உடுமலை வட்டாரத்தில், 25 ஹெக்டேர் பரப்பளவில் சாமை செயல்விளக்க திடல் அமைக்க, ஹெக்டேருக்கு, ரூ.6,000 மானியம் வழங்கப்படுகிறது. வீரிய ஒட்டு ரக சோளம், கம்பு, விதைகள், கிலோவுக்கு, ரூ.100 மானியமாக, 25 குவிண்டால் வழங்கப்படுகிறது.
உயர் விளைச்சல் ரக சோளம் விதை, கிலோவுக்கு, ரூ.30 வீதம், 100 குவிண்டால், கம்பு, 20 குவிண்டால் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், நுண்ணுாட்டச்சத்துக்கள், உயிர் உரங்கள், பூச்சி மருந்துகள், களைக்கொல்லிகள், கையினால் இயக்கக்கூடிய தெளிப்பான்கள் ஆகியவையும் மானியத்தில் வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்து மிக்க சிறுதானிய உற்பத்தி தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் மானிய உதவிகள் பெற வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.
