தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தண்ணீர் தொட்டி அமைக்க ரூ.40,000 வரை மானியம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முகைதீன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தூத்துக்குடி மாவட்டத்தில் சோழபுரம், எட்டயபுரம், கடலையூர், முத்துலாபுரம், படர்ந்தபுளி, கழுகுமலை, காமநாயக்கன்பட்டி, நாலாட்டின்புதூர், கோவில்பட்டி, கடம்பூர், கயத்தாறு, எப்போதும்வென்றான், மணியாச்சி, பசுவந்தனை, வேடநத்தம், ஓட்டப்பிடாரம் ஸ்ரீவெங்கடேஸ்வராபுரம், ஆறுமுகமங்கலம், தெய்வச்செயல்புரம், பெருங்குளம், செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், வல்லநாடு, கீழத்தட்டப்பாறை, முடிவைதானேந்தல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி, ஆத்தூர், திருச்செந்தூர், காடல்குடி, குளத்தூர், புதூர், சிவஞானபுரம், வேம்பாறு மற்றும் விளாத்திகுளம் ஆகிய குறுவட்டங்களில் விவசாயிகள் குழாய்க்கிணறு, ஆழ்துளைக்கிணறு அமைக்கலாம்.
அதன்படி, கிணறுகளுக்கு அதிகபட்சம் ரூ.25,000, டீசல் பம்பு செட் மற்றும் மின் மோட்டார் பம்புசெட்டுகளுக்கு ரூ.10,000, நீர்கடத்திக் குழாய் ஹெக்டேருக்கு ரூ.10,000, தரைநிலை நீர்த்தேக்கத்தொட்டி ஒரு கனமீட்டருக்கு ரூ.350 வீதம் ரூ.40,000 வரை என அனைத்துக்கும் 50 சதவீத மானியம் வழங்கப்படும். இது சொட்டுநீர் அல்லது தெளிப்புநீர் அமைக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
இதற்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் சேமிப்பு வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானியமாக வரவு வைக்கப்படும். மேலும், விவரங்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், நுண்ணீர் பாசனத் திட்டத்தின் வேளாண்மை உதவி இயக்குநர் ஆனந்தி ராதிகா, வேளாண்மை துணை இயக்குநர் முருகப்பன் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
