width:620px height:350px செய்திகள்

தொடர் மழையால் பீன்ஸ் செடியில் மஞ்சள் கருகல் நோய்




பூம்பாறை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பீன்ஸ் செடியில் மஞ்சள் கருகல் நோய் தாக்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பூம்பாறை, வில்பட்டி, மாட்டுப்பட்டி, அட்டுவம்பட்டி, பள்ளங்கி, செண்பகனூர், கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பீன்ஸ் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கு கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பீன்ஸ் செடி பாத்திகளில் தண்ணீர் தேங்கி, பயிரில் மஞ்சள் கருகல் நோய் தாக்கி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இங்கு மிதமான சாரல் மழையுடன் வீசி வரும் பலத்த காற்றையும் பொருட்படுத்தாத விவசாயிகள், பீன்ஸ் செடிகளில் உள்ள களைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், செடி வளர்வதற்கு அமைக்கப்பட்டிருந்த குச்சிகளும் காற்றால் சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் தெரிவித்ததாவது : இரண்டு மாதங்களுக்கு முன் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பீன்ஸ் பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 15 நாள்களுக்கும் மேலாக பெய்து வரும் தொடர் மழையால், பீன்ஸ் செடிகள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளன.

ஏக்கருக்கு ரூ.25,000 செலவு செய்துள்ள நிலையில், தற்போது மஞ்சள் கருகல் நோய் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் சேதமடைந்த விவசாய நிலங்களை பார்வையிட்டு, பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.




தற்போதைய செய்திகள்