width:1000px height:667px செய்திகள்

நுண்ணீர்ப் பாசன கட்டமைப்புகளை ஏற்படுத்தி பயன்பெற விவசாயிகளுக்கு அறிவுரை




விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் தங்களது நிலங்களில் நுண்ணீர்ப் பாசன கட்டமைப்புகளை துணை நிலை நீர் மேலாண்மைத் திட்ட மானியங்களைப் பெற்று மேம்படுத்தி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் வட்டாரம், வளவனூரில் விவசாயி ஒருவரது வயலில், துணைநிலை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

இது குறித்து அவர் அங்கிருந்த விவசாயிகளிடம் கூறியதாவது : மாவட்டத்தில் பிரதமரின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைத்தூவுவான் போன்ற நீர் சிக்கன அமைப்புகளை அமைத்திட ரூ.5,816 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்திலும், பிற விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்திலும் நுண்ணீர்ப் பாசன கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுமட்டுமன்றி விவசாயிகளின் நலன் கருதி, அந்தந்த குறு வட்டங்களில் குறுகிய ஆழக்கிணறு அல்லது குழாய் கிணறு அமைப்பதற்கு 50 சதவிகிதம் மானியம் அல்லது ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதே போல, டீசல் பம்புசெட் அல்லது மின்மோட்டார் பம்புசெட் அமைக்க 50 சதவிகிதம் மானியம் அல்லது ரூ.15,000 வழங்கப்படுகிறது.

மேலும், வயலுக்கு அருகில் பாசன நீரை கொண்டு செல்ல நீர்ப்பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவிகிதம் மானியம் அல்லது ஹெக்டேருக்கு ரூ.10,000 வீதம் வழங்கப்படும். இதே போல, பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கு 50 சதவிகிதம் மானியம் அல்லது ஒரு கனமீட்டருக்கு ரூ.350 வீதம் அதிகபட்சம் ரூ.40,000 கூடுதல் மானியமாக வழங்கப்படுகிறது.

இந்த துணைநிலை நீர் மேலாண்மை திட்டங்களுக்காக விழுப்புரம் மாவட்டத்துக்கு ரூ.1,324 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக விவசாயிகள், துணை நிலை சாதனங்களை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்று, தங்களது வயலில் பொருத்திக் கொள்ளலாம். உரிய ஆய்வுக்கு பிறகு, இதற்கான மானியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இதற்காக விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், நிலத்தின் வரைபடம், வங்கிக் கணக்கு புத்தக நகல், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை அந்தந்த பகுதி வேளாண்துறை அலுவலர்களிடம் சமர்ப்பித்து, இந்தத் திட்டத்துக்கான மானியத்தைப் பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.

 




தற்போதைய செய்திகள்