width:630px height:411px செய்திகள்

தீவனப்பயிர் சாகுபடிக்கு அபிவிருத்தித் திட்டத்தில் விதைகள் பெறலாம்




தீவனப்பயிர் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தீவனப்பயிர் சாகுபடிக்குத் தேவையான விதைகளை இலவசமாக பெற ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தகுதியுடைய விவசாயிகளிடம் இருந்து விணணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து வேலூர் மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ஜெ.நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளதாவது : கால்நடைகள் வளா்க்கவும், பால் உற்பத்தியைப் பெருக்கவும், உற்பத்திச் செலவைக் குறைக்கவும் மானியத்துடன் கூடிய மாநில தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டம் நிகழாண்டில் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இறவை சாகுபடிக்கு நீர்ப்பாசன வசதி கொண்ட 4,000 விவசாயிகளுக்கு மொத்தம் 1,000 ஏக்கருக்கு தலா 2 விதமான விதைகள் வழங்கப்பட உள்ளன.

இவற்றில், ஒரு விவசாயிக்கு கால் ஏக்கர் பரப்பளவுக்குத் தேவையான கோஎஃப்எஸ் 29 தீவனச்சோளம் 375 கிராம், வேலி மசால் 500 கிராம் இலவசமாக வழங்கப்படும். நிலையான பசுந்தீவன உற்பத்திக்கு ஒரு விவசாயிக்கு 10 சென்ட் வீதம் கம்பு நேப்பியர் குச்சிகள் 650, கோஎஃப்எஸ் 29 தீவனச்சோளம் 200 கிராம், தீவன மக்காசோளம் 160 கிராம், தீவன காரமணி 120 கிராம், வேலி மசால் 120 கிராம் என 1,600 விவசாயிகளுக்கு மொத்தம் 450 ஏக்கருக்கு வழங்கப்பட உள்ளது. சுற்றியுள்ள பாத்திகளுக்காக அகத்தி, முருங்கை, வேம்பு, சூபாவுல் ஆகிய மரக்கன்று விதைகளும் வழங்கப்பட உள்ளன.

மானாவாரி நிலங்களில் தீவனப்பயிர் உற்பத்திக்கு மொத்தம் 5,000 ஏக்கருக்கு, 20,000 பயனாளிகளுக்கு விதைகள் வழங்கப்பட உள்ளன. இதில், தலா ஒரு விவசாயிக்கு தீவன காராமணி ஒரு கிலோ, தீவன சோளம் 3 கிலோ வழங்கப்படும். மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகள் நடவு செய்ய பயிர்கள் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.16,750 வீதம் 36 ஏக்கருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியின் மூலம் நூறு நாள் வேலைத் திட்டம், தொண்டு நிறுவனங்கள், ஊராட்சி அமைப்புகள் மரக்கன்றுகளை நடவு செய்யலாம். தலா ரூ.20,000 மதிப்புடைய புல் நறுக்கும் கருவி 200 பயனாளிகளுக்கு 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இத்திட்டப் பயன்களை பெற தகுதியுடைய விவசாயிகள் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.




தற்போதைய செய்திகள்