மானாவாரியில் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளத்தில் நல்ல லாபம் தரக்கூடியது என்பதால் விவசாயிகள் தற்போது அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி சுற்று வட்டார கிராமங்களில் நெல், கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
இதில் கிணறு மற்றும் ஏரி நீர் பாசனம் இல்லாத விவசாயிகள் மழைக்காலத்தில் மட்டுமே எள், வேர்க்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிடுவர். கோடைக்காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் தரிசாகவே காணப்படும். இந்நிலையில், சில தினங்களாக கள்ளக்குறிச்சி பகுதியில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள், தரிசாக கிடந்த விளை நிலங்களில் தற்போது மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனர். இப்பயிருக்கு குறைந்த அளவு தண்ணீரே போதுமானதாக உள்ளது.
மூன்று மாதங்களில் வளர்ந்து அறுவடைக்கு தயாராகும் மக்காச்சோளம், உணவு பொருட்களுக்கு முக்கிய தேவையாக இருப்பதால் நல்ல லாபம் தரக்கூடிய வகையில் இருக்கும். எனவே, விவசாயிகள் தற்போது மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனர்.
