இரசாயன உரங்களைப் பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்தாலும் இயற்கை உரங்களையும் சேர்த்து பயன்படுத்தினால் மட்டுமே மண் வளம் குன்றாமல் பாதுகாத்து நீடித்த நிலையான அதிக விளைச்சலை பெற முடியும். தொழுஉரங்கள் போன்ற இயற்கை உரங்கள் போதுமான அளவிலும் கட்டுபடியான விலையிலும் கிடைக்காத சூழலில், பசுந்தாள் உரங்கள் குறைந்த செலவில் மிக சிறந்த இயற்கை உரமாக விளங்குகிறது என்று அரிமளம் வட்டரா வேளாண்மை உதவி இயக்குநர் கா.காளிமுத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது : பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பு, தக்கைபூண்டு, கொளுஞ்சி ஆகியவற்றை ஏக்கருக்கு 20 கிலோ அளவில் விதைக்க வேண்டும். இவற்றில், தக்கைப்பூண்டு நீர் தேங்கியிருக்கும் சூழலை தாங்கி வளரக்கூடியது, சணப்பு, கொளுஞ்சி குறைந்த அளவு நீரை பயன்படுத்தி வறட்சியையும் தாங்கி வளரக்கூடியவை. பசுந்தாள் உரப்பயிர்களை பூக்கும் பருவத்தில் அல்லது அதற்கு முன்னதாக விதைத்ததிலிருந்து 40 முதல் 60 நாட்களுக்குள் விளைவித்த நிலத்திலேயே மண்ணில் ஈரம் இருக்கும் பொழுது மடக்கி உழுதல் வேண்டும். வாய்பிருக்கும் இடங்களில், சுழற் கழப்பையைப் பயன்படுத்தி மேலும் ஒரு உழவு செய்வதன் மூலம் மடக்கி உழப்பட்ட பசுந்தாள்களை மேற்பரப்பு மண்ணுடன் நன்கு கலக்க செய்யலாம். பசுந்தாள் உரப்பயிர்களை விளைவிப்பதற்கு போதிய கால அவகாசம் இல்லாத பொழுது, பசுந்தழை உரங்களான சீமைக்கொன்றை, புங்கம், சுபாபுல், அகத்தி, வேம்பு மற்றும் எருக்கு போன்றவற்றின் இலைதழைகளை இட்டு உழவு செய்யலாம். இவற்றில், கிளைரிசிடிய செப்பியம் என்னும் அறிவியல் பெயருடைய சீமைக்கொன்றை மரத்தின் இலைதழைகள் சிறந்த பசுந்தழை உரமாகும்.
நிலம் தரிசாக உள்ள காலத்தில் பயிரிடப்படும் பசுந்தாள் உரப்பயிர்கள் மூடாக்கு போன்று செயல்பட்டு மண் அரிப்பையும், ஊட்டசத்துக்கள் இழப்பையயும் தடுக்கிறது. மேலும், நிழல் படிந்த குளிர்ந்த சூழலை உருவாக்கி மண்ணிலிருந்து நீர் ஆவியாவதை தடுத்து, அதன் மூலம் மண்ணில் ஆழப்பகுதியிலிருந்து தீங்கு விளைவிக்கும் உப்புக்கள் மண்ணின் மேற்பரப்பிற்கு வந்து உவர் நிலமாக மாறுவதை தடுக்கிறது.
ஒரே பயிரையே அடுத்தடுத்த பருவங்களில் சாகுபடி செய்தற்கு இடையே பயிர்சுழற்சி முறையில் பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடிசெய்வதால் பயிர் சூழுல் மாறுப்பட்டு பயிர்களை தாக்கும் பூச்சிகள், நோய்கள் வாழ்கை சுழற்சி தடைப்பட்டு இவற்றால் ஏற்படும் பாதிப்பு குறைகிறது.
பசுந்தாள் உரபயிர்களின் வேர்முடிச்சுகளில் வாழும் ரைசோபியம் என்னும் நுண்ணுயிரி காற்றிலுள்ள தழைச்சத்தை ஏக்கருக்கு 30 கிலோ முதல் 45 கிலோ வரை மண்ணில் நிலைநிறுத்துகின்றன.
விளைவித்த நிலத்திலேயே மடக்கி உழப்படும் பசுந்தாள் உரபயிர்கள் நுண்ணியிரிகளால் சிதைக்கப்படும் பொழுது வெளிப்படும் கரிம அமிலங்கள் மண்ணில் கரையாத நிலையிலிருக்கும் ஊட்டச்சத்துக்களை குறிப்பாக மணிச்சத்தை பயிர்களுக்கு கிடைக்ககூடிய வடிவத்தில் மாற்றிக் கொடுக்கின்றன. மேலும் சிதைக்கபடும்போது நிகழும் இரசாயன மாற்றங்கள், மண்ணின் களர் தன்மை நிவர்த்திசெய்கிறது. பசுந்தாள் உரங்களை மடக்கி உழுவதால் ஒரு ஏக்கருக்கு சுமார் 2500 கிலோ அளவில் அங்கக உயிர் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இவை, பல இலட்ச கணக்கான நுண்ணுயிரிகளுக்கு வாழ்விடமாக அமைந்து மண்ணை உயிர்ப்புடன் இருக்கசெய்கிறது, ஊட்ட சத்துகளை தக்கவைத்து கொள்ளும் சேமிப்பிடமாகவும் செயல்படுகிறது.
மேலும் பயிர்களுக்கு இடப்படும் இராயசணங்களால் மண்ணின் அமில கார தன்மையில் ஏற்படும் மாற்றத்தை சமன்செய்து நடுநிலையாக்குகிறது. இவ்வாறு பல்வேறு வகைகளில் மண் நலத்தை பாதுகாத்து மண் வளத்தை பெருக்கும் பசுந்தாள் உரப்பயிர்களை பயன்படுத்துவதன் மூலம் நீடித்த நிலையான அதிக விளைச்சலைப் பெறலாம்.
