கறவை மாடு வளர்ப்பில் மிக முக்கிய நிலை வகிப்பது கன்றுகள் பராமரிப்பாகும். குறிப்பாக கன்றுகள் பிறந்த முதல் ஒரு மாத காலத்தில் பராமரிப்பில் மிகக் கவனம் செலுத்துவது கன்றுகள் இறப்பைத் தடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கன்றுகளை பல நோய்கள் தாக்கினாலும் இளங்கன்றுகளை அதிகம் பாதித்து உயிர்சேதத்தை அதிக அளவில் ஏற்படுத்தும் மிக முக்கியமான நோய் கன்றுக் கழிச்சல் நோயாகும். இது பொதுவாக 2 வாரத்திற்குட்பட்ட இளங்கன்றுளை அதிகமாகப் பாதிக்கிறது. கன்றுகள் இந்த நோயால் பாதிக்கப்படும் பொழுது திடீரென இறந்து பண்ணையாளர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்துவதால் மாடுகள் வளர்ப்போர் கன்றுக் கழிச்சல் நோய் ஏற்படுவதற்கான காரணங்களையும் தடுக்கும் முறைகளையும் நன்கறிந்து தகுந்த மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் கன்றுக்கழிச்சல் நோய் வராமல் தடுக்க முடியும்.
கன்றுக்கழிச்சல் நோய் ஏற்படக் காரணங்கள்:
கன்றுக்கழிச்சல் நோய் பிறந்த கன்றுகளில் "கோலிபார்ம்", என்ற நுண்ணுயிர்க்கிருமியால் ஏற்படுகிறது. இந்த நுண்ணுயிர்க்கிருமிகள் குடற்பகுதியிலுள்ள மற்ற நுண்ணுயிர்க்கிருமிகள் மற்றும் நச்சுயிரிக் கிருமிகளுடன் சேர்ந்து அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சரியாக சீம்பால் கொடுப்படவில்லையெனில் கன்றுக் கழிச்சல் அதிகமாக ஏற்படும்.
அசுத்தமான தண்ணீர், மோசமான சுற்றுப்புறச் சுகாதாரம், அதிக அளவு பால் கொடுத்தல் போன்ற காரணங்களால் இந்நோய் ஏற்படுகிறது. மற்ற கன்றுகளை நக்குதல், கன்றுகளில் குடற்புழு தாக்குதல், சரியான ஊட்டமின்மை, முறையற்ற தீவனமளித்தல், காலநிலை மாற்றம் போன்ற காரணங்களாலும் கன்றுக் கழிச்சல் நோய் ஏற்படுகிறது.
