width:600px height:450px விவசாயம்

இலை கருகல் நோய் தாக்குதலால் தென்னை விவசாயம் பாதிப்பு




பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில், தென்னையை தாக்கும் இலை கருகல் நோயை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னைகளில் ஆண்டுதோறும் வாடல் நோய் தாக்கம் என்பது தொடர்ந்துள்ளது. மேலும், அண்மையில் தென்னைகளில் வெள்ளை ஈ நோய் தாக்குதலும், இலை கருகல் நோயும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தென்னையை வெட்டி அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு போதிய மழையின்றி பல மாதமாக தொடர்ந்து வறட்சி ஏற்பட்டதால் அந்நேரத்தில் சில விவசாயிகள், பட்டுபோய் வாடல் நோய் தாக்கிய மரங்களை அப்புறப்படுத்தி புதிய தென்னை மரக்கன்றுகள் நடவு செய்தனர். இதற்கிடையே இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை அவ்வப்போது பெய்துள்ள நிலையில், பல கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டு ஏற்கனவே நோய் தாக்கப்பட்ட தென்னை மரத்தின் அருகே அமைக்கப்பட்ட தென்னங்கன்றுகளிலும் இலை கருகல் நோய் பரவியுள்ளது தெரிய வருகிறது.

இந்நிலை நீடித்தால் ஒவ்வொரு ஆண்டும் தென்னைகளை வெட்டி அப்புறப்படுத்தப்படுவது அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படக்கூடிய நிலை உண்டாகும். எனவே, தென்னைகளில் பரவும் நோய்களை முறையாக கண்டறிந்து, வேளாண் அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், பல்வேறு நோய்கள் தாக்கப்பட்டு பயன்படாத மற்றும் காய்ப்புத்திறன் குறைந்த தென்னை மரங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தென்னை விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் உள்ள தென்னைகளில் ஈரப்பதம் குறைவால், தென்னைகளில் இலை கருகல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதில் பூஞ்சான நோய் தாக்கப்பட்ட மரத்தின் மட்டையிலிருந்து, காற்றின் மூலம் மற்ற மட்டைகளுக்கு எளிதாக பரவுகிறது. இதனை தடுக்க, தென்னை மரங்களில் நோய் முற்றிய அடிமட்டை இலைகளை வெட்டிவிட வேண்டும். தென்னை கருகல்நோய் தாக்குதலை தடுக்க விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் முறையான ஆலோசனை பெற்று பயன்பெற வேண்டும் என்றனர்.




Site For Sale Contact : 9894832938