கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டிற்கு, மழையால் பாதிக்கப்பட்ட தக்காளி வரத்தால், 12 கிலோ பெட்டி ஒன்றுக்கு, ரூ.70 விலை சரிந்தது.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில், சாகுபடி செய்யப்பட்ட தக்காளி செடிகள் கடந்த சில நாட்களாக பெய்யும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. தக்காளிகளை, விவசாயிகள் பறித்து எடுத்து, 12 கிலோ பிடிக்கக்கூடிய பெட்டியில் அடுக்கி தினசரி மார்க்கெட்டுக்கு கொண்டு வருவது வழக்கம். மார்க்கெட்டில் தக்காளி வரத்து மழை பாதிப்பால் குறைவாக இருந்தது. இதனால் நேற்று முன்தினம், தக்காளி ஏலம் எடுப்பதில் போட்டி ஏற்படவில்லை. இதனால், 12 கிலோ எடையுள்ள தக்காளி பெட்டி ஒன்றுக்கு, ரூ.530க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தில், பெட்டி ஒன்று அதிகபட்சமாக, ரூ.600க்கு ஏலம் போனது. இது கடந்த வாரத்தை காட்டிலும், பெட்டி ஒன்றுக்கு, ரூ.70 விலை சரிந்தது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மழை பெய்வதால், செடிகளில் வளர்ந்துள்ள தக்காளிகள் பாதிக்கப்பட்டுள்ளது. சரியாக பழுக்காமல் பழுப்பு நிறமாக மாறியதால், தக்காளியை ஏலம் எடுக்க வியாபாரிகள் தயங்கினர். இதனால், விலை சரிந்துள்ளது. அதே நேரம் ஓரளவிற்கு கட்டுப்படியான விலை என்பதால் விவசாயிகளுக்கு நட்டம் ஏதுமில்லை என்றனர்.
v
